இந்தோனீசிய எரிமலை வெடிப்பில் சிங்கப்பூரர்கள் இருவர் மரணம்

இந்தோனீசிய எரிமலை வெடிப்பில் சிங்கப்பூரர்கள் இருவர் மரணம்

2 mins read
வெடிப்பு தொடர்வதால், மூவரின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை
7c0637b5-5e95-4a9a-b8f7-98f5faa51fad
அப்பகுதியில் மலையேறச் சென்ற 20 நபர்களில் ஒன்பது பேர் சிங்கப்பூரர்கள் என்று உள்ளூர் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். - படங்கள்: ஏஎஃப்பி
multi-img1 of 2
Google News Preferred Icon
காவல்துறையினர் உட்பட பல மீட்புப் பணியாளர்கள் 20 மலையேறிகளைத் தேடும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் உட்பட பல மீட்புப் பணியாளர்கள் 20 மலையேறிகளைத் தேடும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் வடக்குப் பகுதியில், மலுக்கு வட்டாரத்தின் ‘ஹல்மஹெரா’ தீவில் உள்ள ‘டுகோனோ’ எரிமலை வெள்ளிக்கிழமை (மே 8) வெடித்ததில், சிங்கப்பூரர்கள் இருவர் உட்பட மூவர் மரணமடைந்ததாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது. “இதுவரை மூவர் இறந்துவிட்டனர். அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள். மற்றொருவர் ‘டர்நெட்’ நகரைச் சேர்ந்த குடியிருப்பாளர்,” என்று ‘வட ஹல்மஹெரா’ காவல்துறைத் தலைவர் எர்லிக்சன் பசரிபு, ‘கொம்பஸ்’ தொலைகாட்சியிடம் கூறினார். அவர் குறிப்பிட்ட ‘டர்நெட்’ நகரம், வட மலுக்குவில் அமைந்துள்ளது.

எரிமலை வெடித்தபோது ஒன்பது வெளிநாட்டினர் உட்பட 20 மலையேறிகள் அப்பகுதியில் இருந்தனர். அவர்களில் ஏழு வெளிநாட்டினர் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் பாதுகாப்பாக மலையிலிருந்து இறங்கிவிட்டதாகத் திரு பசரிபு தெரிவித்தார்.

எரிமலையில் வெடிப்பு தொடர்வதால், மரணமடைந்த மூவரின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டினரான ஒன்பது மலையேறிகளும் சிங்கப்பூரர்கள் என்றும் மீதமுள்ள அனைவரும் இந்தோனீசியர்கள் என்றும் உள்ளூர் மீட்புப் பணி முகவையின் தலைவர் ரம்தானி கூறினார்.

காவல்துறையினர் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் அந்த 20 மலையேறிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உள்ளூர் நேரப்படி அவசர உதவிக்கு காலை 8.55 மணிக்கு அழைப்பு வந்ததாக இந்தோனீசியத் தேசிய தேடல், மீட்பு முகவையான ‘பசர்னாஸ்’ அமைப்பு தெரிவித்தது. எரிமலைக்கு அருகில் இருந்த தொடர்புக் கருவி ஒன்றிலிருந்து அனுப்பப்பட்ட சமிக்ஞை அந்த அவசர அழைப்பைத் தூண்டியது எனவும் அந்த அமைப்பு கூறியது.

தேசியப் பேரிடர் தணிப்பு அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, எரிமலை காலை 7.41 மணிக்கு வெடிக்கத் தொடங்கியது. முன்னதாக, அதன் நடவடிக்கைகளைக் கண்காணித்து, மார்ச் 29ஆம் தேதிமுதல் அது வெடிக்கும் என்ற அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்