விமான நிலையப் பாதுகாப்பை அதிகரிக்க இரு வார காலக்கெடு

விமான நிலையப் பாதுகாப்பை அதிகரிக்க இரு வார காலக்கெடு

1 mins read
அளவிடக்கூடிய இலக்குகள் அவசியம் பாதுகாப்பான சமூகத்திற்கான செயற்கூட்டணி வலியுறுத்தல்
b019de21-6062-49aa-96c1-07cafe9c4363
மலேசியாவின் பாதுகாப்புச் சமூகத்திற்கான செயல்கூட்டணியின் தலைவர் லீ லாம் தை. - படம்: தி ஸ்டார்
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: மலேசிய விமான நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இரு வார காலக்கெடுவில், பாதுகாப்பை உறுதிசெய்யும் அளவிடக்கூடிய, தெளிவான இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பான சமூகத்திற்கான செயல்கூட்டணியின் தலைவர் லீ லாம் தை வலியுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூரில் இருந்து ஜகார்த்தா சென்ற மலேசிய விமானப் பணியாளர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விமான நிலையப் பாதுகாப்பை உயர்த்தும் விரிவான திட்டத்தைச் சமர்ப்பிக்க உள்துறை, போக்குவரத்து அமைச்சுகளுக்கு மலேசிய அமைச்சரவை இரு வார கால அவகாசம் அளித்துள்ளது.

“விமான நிலையப் பாதுகாப்பு என்பது நாட்டின் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடையது. இந்த அவகாசம் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க மட்டுமல்லாமல், தற்போதைய அமைப்பில் உள்ள பலவீனங்களைக் கண்டறியவும் பயன்படுத்தப்பட வேண்டும்,” என்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) வெளியிட்ட அறிக்கையில் திரு லீ கூறினார்.

ஆண்டுதோறும் மில்லியன்கணக்கான பயணிகளையும் சரக்குகளையும் கையாளும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பு நடைமுறைகள், அனைத்துலகப் போதைப்பொருள் கும்பல்களின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் போதுமானதாக உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பயணிகள் சோதனை, சரக்குகள் பரிசோதனை, ஊழியர்களுக்கான நுழைவுக் கட்டுப்பாடுகள், உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் மலேசிய விமான நிலையங்கள் போதைப்பொருள் கடத்தல் மையங்களாக மாற ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாவிமான நிலையம்விமானிபாதுகாப்புபோதைப் பொருள்