பெய்ஜிங்: சீனாவின் ஷாங்காய் நகரில் ‘பெபின்கா’ புயல் செப்டம்பர் 16ஆம் தேதி காலை கரையைக் கடந்தது.
இதுவே 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு ஷாங்காயைப் புரட்டிப்போட்டுள்ள ஆக சக்திவாய்ந்த புயல்.
மணிக்கு 151 கிலோ மீட்டர் வேகத்தில் சீறும் ‘பெபின்கா’ புயல் காரணமாக செப்டம்பர் 15ஆம் தேதி இரவிலிருந்து அந்நகரில் உள்ள இரண்டு விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சில ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஷாங்காய் டிஸ்னி ரிசார்ட் போன்ற உல்லாசத் தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பல படகுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
புயல் காரணமாக ஷாங்காய் நகரில் கனமழை பெய்யும் என்று தலைநகர் பெய்ஜிங்கின் அவசரகாலப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

