தைப்பே: ‘டோக்சுரி’ சூறாவளி தைவானை வியாழக்கிழமை தாக்கும் எனத் தைவான் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால், தைவானின் தெற்குப் பகுதியில் நிலச்சரிவு,வெள்ளம் போன்றவை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு செயல்படும் நிறுவனங்களுக்கும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பெரும்பாலான விமான நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான உள்நாட்டு விமானச் சேவையையும் சில வெளிநாட்டு விமானச் சேவையையும் ரத்து செய்தன. தைவானின் தெற்கு, கிழக்கு பகுதிகளுக்கு இடையேயான ரயில் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டன.
‘டோக்சுரி’ சூறாவளி இரண்டாவது வலிமையான சூறாவளி வகையைச் சேர்ந்தது. அது அதிகபட்சமாக மணிக்கு 191 கிமீ வேகத்தில் வீசும் என்றும் தெற்கு தைவான் கால்வாயில் கரையைக் கடக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அப்போது தீவின் தெற்குப் பகுதியில் பலத்தக் காற்று வீசும் எனவும் பலத்த மழைப் பொழியும் எனவும் அம்மையம் எச்சரித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 15,700 க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் அது மீட்டெடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
‘டோக்சுரி’ சூறாவளிப் பிலிப்பீன்சை புதன்கிழமை தாக்கியது. அங்கு அதற்கு ஐந்து பேர் பலியாகினர் என அந்நாட்டின் பேரிடர் அமைப்புத் தெரிவித்தது.

