ஹனோய்: வியட்னாமை நேற்று மாலை (ஆகஸ்ட் 25) தாக்கிய காஜிக்கி சூறாவளியால் குறைந்தது மூவர் உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர்.
நாட்டின் வட மத்திய கரைப் பகுதியைத் தாக்கிய புயலில் கிட்டத்தட்ட 7,000 வீடுகள் நாசமாகின, 28,800 ஹெக்டர் பரப்பளவிலான நெற்பயிர்கள் அழிந்தன, 18,000 மரங்கள் சரிந்தன என்றும் அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
புயல் 331 மின்சார கம்பங்களையும் சாய்த்துவிட்டது. இதனால் நாட்டின் மாநிலங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
புயலைத் தொடர்ந்து பெய்யும் கனமழையில் தலைநகர் ஹனோயின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதை அரசு ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் காட்டின.
கடந்த ஆண்டு வீசிய யாகி புயலால் கிட்டத்தட்ட 300 பேர் பலியானதோடு ஏறக்குறைய $3.3 பில்லியன் டாலர் பொருட்சேதம் ஏற்பட்டது.
லாவோஸ், வட தாய்லாந்து ஆகியவற்றை நோக்கி புயல் நகர்ந்தது.