தைப்பே: சில நாள்களாக தைவானை நோக்கிவந்த சம்பி சூறாவளி, அந்நாட்டின் கரையை சனிக்கிழமை (அக்டோபர் 24) கடந்து சென்று விட்டதென்றாலும் அதன் சீற்றத்தால் அங்கு ஒருவர் உயிரிழந்ததுடன் 500 பேர் காயமடைந்துள்ளனர்.
தைவானில் சூறாவளி பலவகையில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. தைவானில் உள்ள பல இடங்களில் மின்சார விநியோகத்தைத் துண்டித்ததோடு ஏராளமான மரங்களை வேரோடு சாய்த்து, சீனாவை நோக்கி அது சென்றுள்ளது.
இவ்வாண்டு பசிபிக் பெருங்கடலில் உருவான சம்பி, அதன் தாக்கத்தில் சற்று வலுவிழந்தாலும் அதனுள் இயங்கும் மையப் பகுதியில் ஒரு மணி நேரத்தில் 126 கிலோமீட்டர் வேகம் கொண்ட காற்றை அது உள்ளடக்கியுள்ளது. அதன் விவரங்களை தைவானின் மத்திய வானிலை நிர்வாக அமைப்பு தெரிவித்தது.
தைவானின் வடகிழக்குப் பகுதியிலிருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த சம்பி சூறாவளி, அந்நாட்டின் கரையை மேலோட்டமாக அடைந்து பிறகு, வேறு திசைநோக்கிச் சென்றுவிட்டது எனவும் வானிலை அமைப்பு கூறியது.
தைவானின் சில கரையோரப் பகுதிகளில் மணிக்கு 227 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதாக பதிவு செய்யப்பட்டது. அது வீடுகளின் கூரைகள் உட்பட பல கட்டமைப்புகளைத் தகர்த்துச் சென்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.
