‘நௌல்’ சூறாவளி: 20,000க்கும் அதிகமானோரை வெளியேற்றிய சீனா

‘நௌல்’ சூறாவளி: 20,000க்கும் அதிகமானோரை வெளியேற்றிய சீனா

1 mins read
57be332a-5008-47a3-bf2d-7e71407116ff
சீனாவின் செஜியாங் மாநிலத்தில் உள்ள வென்சூ நகரில், ‘பவி’ சூறாவளியால் ஏற்பட்ட கடல்மட்ட உயர்வு, கனமழை காரணமாகச் சாய்ந்து கிடக்கும் கப்பல். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: தென்சீனப் பகுதியை ‘நௌல்’ சூறாவளி நெருங்கி வருவதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20,000க்கும் அதிகமானோரைப் பாதுகாப்பான இடங்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

சூறாவளி காரணமாகக் கனமழையும் பலத்த சூறைக்காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சூறாவளி ஹாங்காங் முதல் குவாங்டாங் மாநிலத்தின் கரையோரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 25) மாலைக்கும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) காலை வேளைக்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும் எனச் சீனாவின் தேசிய வானிலை நிலையம் முன்னுரைத்துள்ளது.

குவாங்டாங், ஃபூஜியன் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றும் பெருமழையும் நிலவும் என எச்சரிக்கப்பட்டதை அடுத்து, ஜூலை 25ஆம் தேதி அங்கு ஆரஞ்சு வண்ண விழிப்புநிலை அறிவிக்கப்பட்டது.

குவாங்டாங்கில் 20,000க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த படகுகள் புயலிலிருந்து தப்பிக்க துறைமுகங்களுக்குத் திரும்பியுள்ளன.

குவாங்டாங்கில் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சாவோசூ நகரிலுள்ள பள்ளிகளில் வகுப்புகள், பிற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த மாதத்தில் சீனாவின் தென், மத்தியப் பகுதிகளில் இயற்கைச் சீற்றங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.

மேசாக் சூறாவளியால் குவாங்சி மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 39 பேர் மாண்டனர்.

ஹூபே மாநிலத்தில் வீசிய சூறைக்காற்று, இடிமின்னலுக்கு 11 பேர் பலியாயினர்; 331 பேர் காயமடைந்தனர்.

கரிம வெளியேற்றத்தால் புவி வெப்பமடைந்து வருவதால், உலகளவில் இத்தகைய தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரிக்கும் என அறிவியல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்