மணிலா: பிலிப்பீன்சும் தைவானும் ‘ரகாசா’ சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராகின்றன. பலத்த காற்றையும் பெருமழையையும் அது கொண்டு செல்கிறது.
நாட்டின் வடமேற்குப் பகுதி நோக்கிச் சென்றபோது புயல் மேலும் வலுவடைந்தது. பாபுயான் தீவுகளில் திங்கட்கிழமை பிற்பகல்வாக்கில் கரையைக் கடக்கும் என்று பிலிப்பீன்ஸ் வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
மணிக்கு 205 கிலோமீட்டர் வேகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவில் புயல்காற்று வீசியதாகக் கூறப்பட்டது.
பிலிப்பீன்ஸ் அரசாங்கம், மணிலாவிலும் 29 மாநிலங்களிலும் உள்ள அலுவலகங்களையும் பள்ளிகளையும் திங்கட்கிழமை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் ஆபத்து அதிகமுள்ள வட்டாரங்களிலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜோன்விக் ரெமுல்லா அறிக்கையொன்றில் சொன்னார்.
தைவானில், கிழக்கே உள்ள ஹுவாலியென் மாவட்டத்திலிருந்து சுமார் 300 பேர் வெளியேற்றப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூறாவளி எந்தப் பக்கம் செல்கிறது என்பதைப் பொறுத்து மேலும் அதிகமானோரை வெளியேற்ற வேண்டுமா என்பது முடிவு செய்யப்படும் என்று அவர்கள் கூறினர்.
முக்கியத் தீவான லூசோனின் வட பகுதிகளில் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வக அதிகாரிகள் முன்னுரைக்கின்றனர்.