லண்டன்: பிரிட்டனில் ஆள்கடத்தலில் ஈடுபடுவோர் புதிய சட்டத்தின்கீழ் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
பிரிட்டிஷ் அரசாங்கம் வியாழக்கிழமை இதனைத் தெரிவித்தது.
சட்டவிரோதக் குடியேற்றத்தை முறியடிக்கவும் எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் பிரிட்டன் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
குடிநுழைவுக் குற்றக் கட்டமைப்பைத் துடைத்தொழிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு புதிய சட்டங்கள் உறுதுணை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சட்டங்கள் நடப்புக்கு வந்தால், ஆள்கடத்தல் தொடர்பாக பிடிபடும் சந்தேக நபர்களுக்குப் பயணத் தடை விதிக்கப்படும்.
அத்துடன், அவர்களின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்படும். கைப்பேசிப் பயன்பாடும் துண்டிக்கப்படும்.
சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டிஷ் அரசாங்கம் அண்மையில் ‘மாற்றத்திற்கான திட்டம்’ என்னும் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
அதுபற்றி விளக்கிய உள்துறை அமைச்சர் யுவெட் கூப்பர், எல்லைப் பாதுகாப்பு அதன் முக்கிய அம்சங்களில் ஒன்று என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“மோசமான குடிநுழைவுக் குற்றக் கும்பல் கட்டமைப்பைத் தடுக்க அதிகாரிகளுக்குத் தேவைப்படும் சட்ட அமலாக்க அதிகாரங்கள் வழங்கப்படும்,” என்றார் அவர்.
பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு மனிதர்களைக் கடத்திச் செல்ல இங்கிலிஷ் கால்வாயை முக்கிய வழியாக குற்றக் கும்பல்கள் பயன்படுத்துகின்றன.
கடந்த ஜூலை மாதம் பிரிட்டிஷ் பிரதமர் பொறுப்பை ஏற்ற கீர் ஸ்டாமர், ஆள்கடத்தல் கும்பல்களை துடைத்தொழித்து சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்த உறுதிபூண்டார்.
அதனைத் தொடர்ந்து, இடைக்கால கடுமையான குற்றத் தடுப்பு உத்தரவுகளைப் (SCPO) பிறப்பிக்க அவரது அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
2024ஆம் ஆண்டில் ஆபத்தான முறையில் எல்லைகளைக் கடந்து 36,800 பேர் பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர்.
அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் அந்த எண்ணிக்கை 25 விழுக்காடு அதிகம் என்பதால் அதனைத் தடுத்து நிறுத்துவதில் பிரிட்டன் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.

