கீவ்/லண்டன்: உக்ரேன் இந்தக் கோடைக்காலத்தில், தன்னால் இயன்றவரை அதிகமான தானியங்களை ஏற்றுமதி செய்ய முயற்சி செய்துவருகிறது.
ரஷ்யா தனது துறைமுகங்களைத் தாக்கியுள்ளபோதும், கருங்கடலில் தனக்கு உள்ள ராணுவப் பலன்களைப் பயன்படுத்தி உக்ரேன் ஏற்றுமதிகளை வலுப்படுத்துகிறது.
உலக அளவில் கோதுமையையும், சோளத்தையும் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளில் உக்ரேனும் ஒன்று. 2022ஆம் ஆண்டில் ரஷ்யாவின் படையெடுப்புக்கு முன்னர், உக்ரேன் கருங்கடல் வழியாக ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 6 மில்லியன் டன் அளவில் தானியங்களை ஏற்றுமதி செய்தது.
தானிய விற்பனை முக்கிய வருவாய் மூலமாக உள்ளது. உலகளவில் விலைகள் வலுவிழந்துள்ள நிலையில், உக்ரேனின் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஏற்றுமதிகளைச் செய்வது தவிர வேறு வழி இல்லை. அடுத்த குளிர்காலப் பருவத்திற்கு அவர்களுக்கு நிதி தேவைப்படுகிறது.
உக்ரேன் கடந்த ஜூலை மாதம் 4.2 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் மேல் உணவு ஏற்றுமதி செய்தது. சென்ற ஆண்டு அதே மாதத்தைக் காட்டிலும் அது ஒரு மடங்கு அதிகம் என்று உக்ரேனின் ‘யுஜிஏ’ வர்த்தகர்கள் தொழிற்சங்கம் தெரிவித்தது.
கருங்கடலின் முக்கிய ஏற்றுமதி நடுவமான ‘ஒடிசா’விலும், ஐரோப்பாவுக்குள் தானியங்களைக் கொண்டுசெல்லும் ‘இஸ்மாயில்’ எனும் முக்கியத் துறைமுகத்திலும் ரஷ்யத் தாக்குதல்கள் அதிகரித்த நிலையிலும் அது சாத்தியமானதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலையில் ஏற்றுமதி செய்யப்பட்ட இடங்கள் குறித்து உக்ரேன் இன்னமும் தகவல்கள் வெளியிடவில்லை.
இருப்பினும் சென்ற பருவத்தில், தனது தானியங்களில் பெரும்பாலானவற்றை ஸ்பெயின், எகிப்து, இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்கு அது ஏற்றுமதி செய்தது. அதன் சோள ஏற்றுமதிகள் பெரும்பாலும் ஸ்பெயினுக்கும் சீனாவுக்கும் சென்றன.

