உக்ரேன் போர் நிறுத்தப் பரிந்துரை: மாற்றங்களை நாடும் புட்டின்

2 mins read
44620272-b6b3-462a-a888-7eaed79ddaa2
போரையொட்டி ராணுவப் பயிற்சிகளில் ஈடுபடும் உக்ரேனிய ராணுவ வீரர்கள். - படம்: இபிஏ

மாஸ்கோ: உக்ரேன் போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்துள்ள பரிந்துரையைத் தாம் மேலோட்டமாக ஆதரிப்பதாக ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வியாழக்கிழமை (மார்ச் 13) கூறினார்.

அதேவேளை, போரை முடிவுக்குக் கொண்டுவரும் அம்சங்கள் பரிந்துரையில் இடம்பெறவில்லை என்பதை திரு புட்டின் சுட்டிக் காட்டினார்.

அமெரிக்கா முன்வைத்துள்ள போர் நிறுத்தப் பரிந்துரைக்கு திரு புட்டின் ஆதரவு தெரிவித்திருப்பது, அவர் வா‌ஷிங்டனுடன் நல்லுறவு வைத்துக்கொள்ள விரும்புவதை எடுத்துக் காட்டுவதாக நம்பப்படுகிறது. அதோடு, இதையடுத்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் அவர் மேலும் பேச்சுவார்த்தை நடத்த வழி பிறக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆனால், பல முக்கிய அம்சங்கள் இன்னும் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று திரு புட்டின் கூறியுள்ளார். எந்தவோர் ஒப்பந்தமும் உக்ரேன் போர் மூண்டதற்கான மூலக் காரணத்தைக் கருத்தில்கொண்டு வரையப்பட வேண்டும் என்பது அவரின் வாதம்.

“பூசல்களை நிறுத்துவதற்கான பரிந்துரைகளை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்,” என்று திரு புட்டின் கிரெம்ளினில் செய்தியாளர்களிடம் சொன்னார். பெலருஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்கா‌ஷெங்கோவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு திரு புட்டின் செய்தியாளர்களிடம் பேசினார்.

“அதேவேளை, இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவிடுவதாக இருக்க வேண்டும், இந்த நெருக்கடி தலைதூக்கியதற்கான மூலக் காரணங்களைச் சரிசெய்ய வேண்டும்,” என்றும் அவர் விளக்கினார்.

திரு புட்டின் இவ்வாறு கூறியிருப்பது நம்பிக்கை தரும் வண்ணம் இருப்பதாகக் கூறிய திரு டிரம்ப், அவருடன் தொலைபேசிவழி பேசத் தாம் தயாராய் இருப்பதாகத் தெரிவித்தார். மாஸ்கோ சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் திரு டிரம்ப் சொன்னார்.

இதற்கிடையே, திரு புட்டினின் கருத்துகள் தெளிவற்றவை என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி சாடியுள்ளார். திரு புட்டினின் கருத்துகள், ஒருவர் தன்னை அறியாமல் மனத்தை மாற்றிக்கொள்ளச் செய்யும் வகையில் அமைந்துள்ளதாக திரு ஸெலென்ஸ்கி எடுத்துரைத்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ர‌ஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்தது. அதனைத் தொடர்ந்து இப்போரில் நூறாயிரக்கணக்கானோர் மாண்டுவிட்டனர், மில்லியன்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. போரில் பல நகரங்கள் தரைமட்டமாயின.

உக்ரேன் போரினால் பல ஆண்டு காலமாகக் காணப்படாத வகையில் ர‌ஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மோசமான பதற்றநிலை உருவாகியிக்கிறது.

குறிப்புச் சொற்கள்