தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேனியப் போர்: பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமெரிக்க, பிரிட்டிஷ் தலைவர்கள் சந்திப்பு

2 mins read
5a30b137-dc67-4665-93d6-f4108d15c93a
கென்ட்டில் உள்ள பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமியின் (இடமிருந்து 2வது) அதிகாரத்துவ இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்கத் துணையதிபர் ஜே டி வான்ஸ் (வலமிருந்து 2வது), உக்ரேனிய அதிகாரிகள் ஆண்ட்ரே யெர்மாக் (இடது), ரஸ்டம் உமரோவ்.  - படம்: எக்ஸ் / டேவிட் லாமி

லண்டன்: அமெரிக்கத் துணையதிபர் ஜே டி வான்சும் பிரிட்டி‌‌ஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமியும் உக்ரேனிய-ர‌‌ஷ்யப் போர் குறித்துப் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.

கென்ட்டில் உள்ள திரு லாமியின் அதிகாரத்துவ இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அதில் உக்ரேனிய அதிகாரிகளும் ஐரோப்பாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசர்களும் கலந்துகொண்டனர்.

சந்திப்பின்போது பேசிய திரு லாமி, “பிரிட்டன் உக்ரேனுக்கு அளித்துவரும் ஆதரவு தொடர்ந்து உறுதியாக உள்ளது. அங்கு நேர்மையான முறையில் நீண்டகால அமைதி ஏற்படத் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுகிறோம்,” என்றார்.

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தமது நாட்டின் எந்தப் பகுதியையும் ர‌‌ஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று மீண்டும் உறுதியாகக் கூறியிருக்கும் வேளையில் அண்மைச் சந்திப்பு நடைபெற்றது.

அதற்கு முன்னர் பிரிட்டி‌‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் உக்ரேனிய அதிபருடன் தொலைபேசியில் உரையாடினார். அமைதியை எட்டுவதற்கு அது முக்கியமானதொரு சந்திப்பு என்பதை இருவரும் அப்போது ஒப்புக்கொண்டனர்.

அலாஸ்காவில் அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ர‌‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் சந்திக்கவிருக்கின்றனர்.

இரு நாடுகளின் நலன்களையும் கருத்தில்கொண்டு சில பகுதிகளை இங்குமங்கும் மாற்றவேண்டியிருக்கும் என்று திரு டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) குறிப்பிட்டிருந்தார்.

சனிக்கிழமை காலையில் திரு ஸெலென்ஸ்கி டெலிகிராம் பதிவில் அதற்குப் பதில் கூறியிருந்தார்.

“உக்ரேனியர்கள் அவர்களின் நிலப் பகுதியை ஆக்கிரமித்தோரிடம் கொடுக்கமாட்டார்கள்” என்றார் திரு ஸெலென்ஸ்கி. எந்தவோர் அமைதிப் பேச்சாக இருந்தாலும் அதில் உக்ரேனும் பங்கெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்