லண்டன்: திருத்தங்கள் செய்யப்பட்ட அமைதித் திட்டத்தை அமெரிக்காவுடன் உக்ர்எஎன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறது. ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது திட்டத்தின் நோக்கம்.
பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளின் தலைவர்களுடன் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி லண்டனில் திங்கட்கிழமை (டிசம்பர் 8) பேச்சு நடத்திய பிறகு அந்த முடிவு எட்டப்பட்டது. உக்ரேனின் நிலையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அந்தப் பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்து மூன்றரை ஆண்டுக்கும் மேலாகிறது. அமைதித் திட்டத்திற்கு விரைவில் உடன்படுமாறு உக்ரேனை நெருக்குகிறது அமெரிக்கா. அமெரிக்கா வரைந்த அமைதித் திட்டம் மாஸ்கோவுக்கு ஆதரவாய் இருப்பதாகப் பரவலாய்ப் பேசப்படுகிறது.
உக்ரேன் தனது நிலப்பகுதியில் எதனையும் விட்டுக்கொடுக்காது என்ற தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் திரு ஸெலென்ஸ்கி.
பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், ஜெர்மானியப் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன் ஆகியோர் திரு ஸெலென்ஸ்கியுடன் சேர்ந்து, அமெரிக்காவிடமிருந்து உக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பெற்றுத்தர முயல்கின்றனர். உக்ரேன்மீது ரஷ்யா மேலும் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க வாஷிங்டன் உதவ வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
உடன்பாட்டை வரையும் முயற்சியில் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் அதில் உக்ரேனோ ரஷ்யாவோ கையெழுத்திடுமா என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
“நாங்கள் உக்ரேனுக்கு ஆதரவாகத் துணை நிற்கின்றோம். சண்டை நிறுத்தம் என்றால் அது நேர்மையான முறையில் நீடித்து நிலைத்து நிற்கும் ஒன்றாய் இருக்க வேண்டும்,” என்றார் திரு ஸ்டார்மர்.
அவரைப் போன்றே, திரு மெக்ரோனும் திரு மெர்சும் உறுதியான திட்டத்திற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

