கியவ்: ரஷ்யத் தாக்குதல்கள் காரணமாக உக்ரேனில் மின்சார விநியோகம் நெருக்கடி நிலையை நெருங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் நான்கு மணிநேரத்துக்காவது மின்சார விநியோகம் இல்லாதிருந்தால் மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என்று அதிகாரிகள் கவலை கொண்டுள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
அப்படிப்பட்ட நிலைமை ஏற்கெனவே உருவெடுத்துவிட்டதாக சிலர் தனிப்பட்ட முறையில் எச்சரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கியவ்வில் சில குடும்பங்கள் ஏற்கெனவே 20 மணிநேரம் வரையிலான மின்தடையை எதிர்நோக்குகின்றனர்.
சென்ற ஆண்டு குளிர்காலத்தில் இருந்ததைக் காட்டிலும் மின்தடைகள் சற்று முன்னதாகவே தடை ஆரம்பித்துவிடுகிறது. கூடுதல் நேரத்துக்கும் மின்தடை நீடிக்கிறது.
உக்ரேனின் குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் மின்தடையால் வெளிச்சமின்றி தவிக்கின்றன. கியவ்வில்தான் நிலைமை ஆக மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் ரயில்களும் டிராலி பேருந்துகளும் சில வேளைகளில் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக நூறாயிரக் கணக்கான உக்ரேனியர்கள் மின்சாரம் இல்லாமல் தவித்துவருகின்றனர்.
உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்புப் பகுதிகளைக் குறிவைத்து ரஷ்யா பெரிய அளவில் தாக்குதல் நடத்திவருவதால் இந்தச் சூழல் உருவாகியுள்ளது. எடுத்துக்காட்டாக, உக்ரேனின் ஆகப்பெரிய மின்சார உற்பத்தி ஆலைகளில் ஒன்று ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான பிறகு சீர்குலைந்துபோயிருப்பதை பிபிசி கண்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த ஆலையின் பெயர் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், பாதிப்பால் குளிரின் கடுமையிலிருந்து தப்பிக்க சிலர் கியவ்வைவிட்டு அல்லது ஒட்டுமொத்தமாக உக்ரேனைவிட்டு வெளியேற முடிவெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
