கியவ்: அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தான் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தை இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் மிகவும் ஆக்கபூர்வமான ஒன்று என உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி சனிக்கிழமை (ஜூலை 5) தெரிவித்தார்.
“ஒரு நாளுக்குமுன் அதிபர் டிரம்ப்புடன் நான் மேற்கொண்ட பேச்சுவார்த்தை பெரும்பாலும் அண்மையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் மிகவும் ஆக்கபூர்வமான ஒன்று.
“ஆகாயத் தற்காப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்துப் பேசினோம். இதில் அவர் உதவி அளிக்க முன்வந்ததற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிராக பேட்ரியட் தற்காப்பு முறைதான் சரியான பாதுகாப்பு அளிக்கும்,” என்று தனது இரவு நேர காணொளி உரையில் தெரிவித்தார்.
தாங்கள் இருவரும் முக்கியமான பல பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக அதிபர் ஸெலன்ஸ்கி கூறினார். இதில் இரு நாட்டு அதிகாரிகளும் வரும் நாள்களில் நடைபெறும் கூட்டங்களில் பேசுவர் என்று திரு ஸெலன்ஸ்கி விளக்கினார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று தான் ஸெலன்ஸ்கியுடன் நடத்திய பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புட்டின் உக்ரேன் போர் தொடர்பில் சண்டைநிறுத்தத்திற்கு உடன்படாதது அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ஏமாற்றம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.