கோலாலம்பூர்: மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியுடன் அம்னோ கட்சியும் தேசிய முன்னணியும் கண்மூடித்தனமாக எந்தவோர் அரசியல் உடன்பாட்டையும் செய்துகொள்ளாது என்று துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
கூட்டணி, வெளித்தரப்பினருடன் இணையுமா என்பதைத் தொண்டர்களின் மனநிலையே தீர்மானிக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
உலக இஸ்லாமியச் சுற்றுப்பயண, வர்த்தகக் கண்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெற்ற அமைச்சர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகளின் உச்சிநிலை மாநாட்டைத் தொடங்கிவைத்துத் திரு ஸாஹிட் பேசினார்.
“தொண்டர்களின் மனநிலை பலதரப்பட்டதாக உள்ளது. எனவே நாங்கள் விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். மீன்களால் வாழ முடியாத ஒரு சூழலுக்குள் நாம் செல்லக்கூடாது அல்லது எலும்பு மட்டுமே எஞ்சியிருக்கும் நிலைக்கு மீனைப் பிணைக்கக் கூடாது,” என்றார் அவர்.
மலாக்கா முதலமைச்சரும் தேசிய முன்னணியின் மாநிலத் தலைவருமான திரு அப் ரவுஃப் யூசோ, மத்திய தலைமையுடன் இணைந்து இறுதி முடிவை எடுப்பார் என்று திரு ஸாஹிட் தெரிவித்தார்.
அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெறவுள்ள பாஸ் கட்சியின் ‘முக்தாமர்’ கூட்டத்திற்கு அம்னோ கட்சி, ஒரு பிரதிநிதியை அனுப்பும் என்பதையும் திரு. ஸாஹிட் உறுதிப்படுத்தினார்.
மலாக்கா தேர்தலுக்காகப் பெரிக்கத்தான், தேசிய முன்னணியுடன் இடங்கள் குறித்துப் பேச்சு நடத்திவருகிறது. ஆயினும் பக்கத்தான் ஹரப்பானுடன் தேசிய முன்னணி சேர்ந்தால் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறத் தயார் என்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்திருந்த நிலையில், திரு ஸாஹிடின் கருத்துகள் வந்துள்ளன.


