ரோஹிங்யா அகதிகளுக்கான உணவுப் பாதுகாப்பை உயர்த்தும் ஐநா

ரோஹிங்யா அகதிகளுக்கான உணவுப் பாதுகாப்பை உயர்த்தும் ஐநா

படம்: ஏஎஃப்பி

24 Mar 2026 - 5:38 pm

2 mins read

டாக்கா: பங்ளாதேஷில் உள்ள ரோஹிங்யா அகதிகளுக்கான தனது திட்டத்தை, ஏப்ரல் மாதம் முதல் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உணவு அமைப்பு மாற்றிமைக்க உள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்ச உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) அதன் பேச்சாளர் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டு மியன்மாரில் நடந்த ராணுவ ஒடுக்குமுறை காரணமாக அந்நாட்டை விட்டு வெளியேறி, தற்போது பங்ளாதேஷில் இருக்கும் நெரிசலான முகாம்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்யாக்கள் வசித்து வருகின்றனர்.

அந்த முகாம்களில் வேலைவாய்ப்பு அல்லது கல்வி வசதிகள் மிகக் குறைவாக உள்ள நிலையில், அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நெருக்கடி தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக மனிதநேய அமைப்புகளுக்கு அதிகரித்து வருகிறது.

உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் புதிய தேவை அடிப்படையிலான, அடுக்குமுறை அணுகலின் மூலம் அனைத்து அகதிகளின் குறைந்தபட்ச உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யவும் அதே நேரத்தில் கடும் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த உதவியைக் குறைப்பதற்குப் பதிலாக, 2025ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு குடும்பத்தின் உணவுப் பாதுகாப்பின்மை அளவைப் பொறுத்து மாதாந்தர உணவுக்கான ஆதரவு வழங்கப்படும் எனப் பங்ளாதேசுக்கான உலக உணவுத் திட்டத்தின் பேச்சாளர் குன் லி கூறினார்.

மேலும், “வேறுபட்ட உணவுப் பங்கீட்டின் அளவு என்பது நீண்டகால நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான உலகளாவிய சிறந்த நடைமுறையாகும்.

“யாருக்கு உணவுக்கான உதவி மிக அதிகமாகத் தேவையோ அவர்களுக்கு அது சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை அது உறுதிசெய்யும்,” என அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்