உதவி அமைப்புக்கு மின்சார, நீர் விநியோகத்தைத் தடுக்கும் இஸ்ரேலியச் சட்டம்: சாடும் ஐநா

2 mins read
ed2e59ef-43c8-4a8d-b4b2-74aa144299bf
சிரியா, லெபனான், ஜோர்தான், மேற்குக் கரை, காஸா முதலியவற்றில் மில்லியன் கணக்கான பாலஸ்தீனர்களுக்குக் கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு உதவிகளை அமைப்பு செய்துவருகிறது. - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: ஐக்கிய நாட்டு (ஐநா) நிறுவனத்தின் பாலஸ்தீன அகதிகள் அமைப்புக்குச் சொந்தமான நிலையங்களுக்கான மின்சார, நீர் விநியோகத்தைத் தடுக்கும் இஸ்ரேலியச் சட்டத்தை ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டித்திருக்கிறார்.

ஐநாவின் பேச்சாளர் ஸ்டெஃபான் டுஜாரிக் அதனைத் தெரிவித்தார். அமைப்பின் செயல்முறைகளையும் இயக்கத்தையும் இஸ்ரேலின் நடவடிக்கை மேலும் பாதிக்கும் என்று அவர் சொன்னார்.

ஐநாவுக்கான முன்னுரிமைகளும் சட்டங்களிலிருந்து காத்துக்கொள்ளும் தடுப்பாற்றலும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா மீட்பு-பணி அமைப்புக்கும் அதன் சொத்துகளுக்கும் அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்றார் திரு டுஜாரிக். அமைப்பு, ஐநாவுடன் ஒன்றிணைந்த ஓரங்கம் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

அமைப்பின் தலைமை ஆணையர் ஃபிலிப் லாஸரினியும் இஸ்ரேலின் நடவடிக்கையைச் சாடினார். ஐநாவின் மீட்பு-பணி அமைப்பை அவமதிக்கும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதி என்றார் அவர். அவ்வாறு இஸ்ரேல் செய்வதால் பாலஸ்தீன அகதிகளுக்கு உதவிப்பொருள்கள் சென்றுசேர்வது தடுக்கப்படுகிறது என்பதை அவர் சுட்டினார்.

2024ஆம் ஆண்டு, இஸ்ரேலிய நாடாளுமன்றம், நாட்டில் அந்த அமைப்பு இயங்குவதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. அந்த அமைப்புடன் அதிகாரிகள் தொடர்புகொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, ஐநா அமைப்பு கிழக்கு ஜெருசலத்தில் செயல்படுகிறது. கிழக்கு ஜெருசலம் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதாக அமைப்பு கருதுகிறது. ஜெருசலம் முழுமையும் நாட்டின் ஒரு பகுதி என்று நினைக்கிறது இஸ்ரேல்.

சிரியா, லெபனான், ஜோர்தான், மேற்குக் கரை, காஸா முதலியவற்றில் மில்லியன் கணக்கான பாலஸ்தீனர்களுக்குக் கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு உதவிகளை அமைப்பு செய்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்