பக்கூ: அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் நவம்பர் நடைபெறும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பருவநிலை மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
ஆனால் முக்கிய தலைவர்கள் பலர் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
அண்மையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
இதன் தாக்கம் பருவநிலை மாநாட்டில் உணரப்பட்டது.
அடுத்த இரண்டு நாள்கள் நடைபெற இருக்கும் பருவநிலை மாநாட்டில் 75க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரிம வெளியேற்றத்துக்குப் பேரளவில் காரணமான ஜி20 நாடுகளின் தலைவர்களில் பலர் பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் மாநாட்டில் கலந்துகொள்ள பக்கூவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“பருவநிலைப் பாதுகாப்பும் தேசிய பாதுகாப்பும் ஒன்று என்று பிரிட்டிஷ் அரசாங்கம் நம்புகிறது,” என்று பிரட்டனின் எரிசக்தித்துறை அமைச்சர் எட் மிலிபேன்ட் நவம்பர் 11ஆம் தேதியன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஸி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் முதலிய தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளை முடிவுக்குக் கொண்டு வராது என்று அமெரிக்காவின் பருவநிலை தூதர் உறுதி அளித்தார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐநாவின் பருவநிலைப் பிரிவுத் தலைவர் சைமன் ஸ்டியேல் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, வளர்ந்துவரும் நாடுகளில் பருவநிலை மாற்றுத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நிதிதிரட்டு முயற்சி மிகவும் சவால்மிக்கது என்று அக்கறை குரல்கள் எழுந்துள்ளன.
அதற்கு ஐநாவின் பருவநிலை மாநாடு முன்னுரிமை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

