ஜெனிவா: அமெரிக்கா போன்ற முக்கிய நாடுகளின் நிதி உதவி கிடைக்காததால் உலகில் அகதிகளாக உள்ளவர்களுக்கு தேவைப்படும் உணவை வெகுவாகக் குறைக்க வேண்டியுள்ளதாக ஐநாவின் உலக உணவு நிறுவனம் கூறியுள்ளது.
இதனால், பசியில் வாடும் மக்களுக்கு எவ்வாறு உணவளிப்பது என்று தெரியாமல் தான் சிரமப்படுவதாக அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியிருக்கும் குறிப்புகள் காட்டுவதாகக் கூறப்படுகிறது
ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களால் தற்காப்புக்கானச் செலவுகளை அதிகரித்து உள்ள ஐரோப்பிய நாடுகளுடன் அதிபர் டிரம்ப்பின் தலைமையிலான அமெரிக்காவும் நிதியுதவியைக் குறைத்துவிட்டதால் ஐநா உணவு நிறுவனம் திண்டாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியத் தலைநகர் ரோமை தலைநகராகக் கொண்ட ஐநா உலக உணவு நிறுவனம் உலகம் முழுவதும் பட்டினியால் வாடும் மக்களுக்குத் தேவைப்படும் உணவு வழங்க தேவைப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதால் உலகில் கிட்டத்தட்ட 58 மில்லியன் பேர் அதிகப்படியான பசி, பட்டினியால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
இதில் சூடானில் கடும் உணவுத் தேவை இருப்பதால் அங்கு மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) தெரிவித்தது.
இதன் தொடர்பில் அந்நிறுவனம் தனது அலுவலக ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பை கண்ணுற்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஸ்டீவன் ஒமோலோ, இவ்வாண்டு நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய நிதியுதவி சென்ற ஆண்டு கிடைத்ததைவிட 40% குறைவாக இருக்கும் என மதிப்பிடப்படுவதால், நிறுவனத்தின் உணவு விநியோகம் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எந்தெந்த நாடுகள் பொறுப்பு என்பதை திரு ஒமோலோ கூறவில்லை.
“இந்த நிலைமையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதது கவலையளிக்கிறது,” என்று கூறிய அவர் தற்பொழுது குறைக்கப்பட்டுள்ள உணவு விநியோகம் நிலைமையை சமாளிக்க போதுமானதாக இருக்காது என்றும் உணவு விநியோகம் மேலும் குறைக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் திரு ஒமோலோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அண்மைய ஆண்டுகளில் உலக உணவு நிறுவனத் தேவைக்கு அதிகமான நிதியுதவி வழங்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஐரோப்பிய ஆணையம் ஆகியவை முன்னணி வகிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மன்றத்தில் இடம்பெற்றுள்ள பிற அமைப்புகளைப்போல் உலக உணவு நிறுவனம், தான் பெறும் நிதியுதவியால் மட்டுமே செயல்படுகிறது.

