நியூயார்க்: ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கிவருதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை செயல்படுவதற்குத் தேவையான நிதி மட்டுமே அதனிடம் இருக்கிறது. ஐநாவுக்கு நிதி தரும் பல முக்கிய உறுப்பு நாடுகள் இன்னும் கட்டணத்தை மிச்சம் வைத்திருக்கும் நிலையில் இச்சூழல் உருவாகியுள்ளது.
அந்த நாடுகளில் அமெரிக்கா, சீனா ஆகியவையும் அடங்கும்.
ஆகஸ்ட்டுக்குப் பிறகு
“ஆகஸ்ட்டைத் தாண்டிய காலத்துக்குத் தேவையான நிதி எங்களிடம் இல்லை,” என்று ஐநா செயல்பாட்டு நிர்வாகி (controller) சந்திரமெளலி ராமநாதன் புதன்கிழமை (ஜூலை 1) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“செப்டம்பருக்கான நிதி இல்லை. செப்டம்பரைத் தாண்டிய காலத்துக்கான கட்டணங்களைப் பெற இன்னும் காத்துக்கொண்டிருக்கிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐநா பலகாலமாக நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கிவருகிறது. 2026க்கான வரவுசெலவுத் திட்டத்தில் வாஷிங்டனும் பெய்ஜிங்கும் செலுத்தவேண்டிய கட்டணத்துக்காக அது காத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் சீனாவும்தான் ஆக அதிக அளவில் ஐநாவுக்கு நன்கொடை வழங்கும் உறுப்பு நாடுகளாகும்.
‘ஹை லெவல் வீக்’
ஆண்டுதோறும் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் ‘ஹை லெவல் வீக்’ எனும் சந்திப்பு நியூயார்க்கில் நடைபெறவிருக்கிறது. தங்களின் முக்கிய நன்கொடையாளர்கள் நிதி தராவிட்டால் அச்சந்திப்பை நடத்த ஐநா தங்களின் மற்ற கட்டணங்களைத் தள்ளிப்போட வேண்டியிருக்கும்.
“தேவையான பொருள்களைப் பலமுறைகளில் நாடுவதோடு மற்ற கட்டணங்களை நிறுத்திக்கொண்டு ‘ஹை லெவல் வீக்’கை நடத்தவிருக்கிறோம்,” என்றார் திரு ராமநாதன். சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் பணம் தராத காரணத்தினால் சந்திப்பை நடத்த முடியாமல் போகும் நிலை ஏற்படக்கூடாது என்று உறுப்பு நாடுகளிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐநாவுக்கான நிதியில் 22 விழுக்காட்டுத் தொகையை வழங்குவது அமெரிக்காவின் பொறுப்பாகும். ஆனால், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கம் அதில் ஒரு சிறிய பங்கை மட்டுமே வழங்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கான தொகையையும் சேர்த்து அமெரிக்கா இன்னும் கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டாலரைத் (2.59 பில்லியன் வெள்ளி) தரவேண்டும் என்று திரு ராமநாதன் குறிப்பிட்டார்.
அதேபோல், சீனா தான் வழங்கவேண்டிய தொகையில் ஒரு பங்கை மட்டுமே தந்திருப்பதாகவும் இன்னும் ஏறத்தாழ 430 பில்லியன் டாலரை மிச்சம் வைத்திருப்பதாகவும் அவர் சுட்டினார்.

