தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐநா தலைமைச் செயலாளர் கதறல்: கொலைக் களமாக மாறிவிட்டது காஸா

2 mins read
727a217f-c3cc-4b92-b9dc-0e01b3c765fb
மனிதாபிமான உதவிப் பொருள்கள் காஸாவுக்கு வரவில்லை என்று ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: இஸ்ரேல் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளைத் தடுத்து வருவதால் காஸா வட்டாரம் கொலைக் களமாக மாறிவிட்டது என்று ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கதறாதக் குறையாகக் கூறியுள்ளார்.

ஆனால் அவரது கூற்றை இஸ்ரேல் உடனடியாக மறுத்துள்ளது. அங்கு எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லை என்று இஸ்ரேல் தரப்பு தெரிவித்தது.

“ஒரு மாதத்துக்கு மேல் துளிகூட உதவியின்றி காஸா தவிக்கிறது. உணவில்லை, எரிபொருள் இல்லை, மருந்து இல்லை, வர்த்தக விநியோகம் இல்லை. மனிதாபிமான உதவிப்பொருள்கள் இல்லாமல் வறண்ட நிலமாக காஸா காட்சியளிக்கிறது,” என்று குட்டரெஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

போரில் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய ஜெனிவா உடன்பாட்டைச் சுட்டிக்காட்டிய அவர், மக்களுக்குச் சரளமாக உணவு, மருந்துகள் கிடைப்பதை ‘ஆக்கிரமிக்கின்ற சக்தி’க்கு உறுதி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது என்றார்.

“இன்று வரை எதுவுமே நடக்கவில்லை. காஸா வட்டாரத்துக்குள் மனிதாபிமான உதவிப் பொருள்கள் நுழைவது இல்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒரென் மர்மோர்ஸ்டெய்ன் மறுத்தார்.

“காஸாவில் மனிதாபிமான உதவிக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை,” என்றார் அவர்.

ஆனால் காஸாவுக்கான அண்மைய உதவிகளை ஹமாஸ் தனது போர் ஆயுதங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் காசாவுக்கான உதவிகளை கட்டுப்படுத்தும் இஸ்ரேலின் உத்தேசத் திட்டங்களையும் ஐநா தலைமைச் செயலாளர் திரு குட்டரெஸ் குறை கூறினார்.

“உதவி விநியோகத்திற்காக இஸ்ரேலிய அதிகாரிகள் முன்மொழிந்துள்ள புதிய அங்கீகார வழிமுறைகள் மேலும் கட்டுப்படுத்தும் அபாயத்தையும் கடைசி தானியம் வரை உதவிகளை தடுக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேற்கு கரையில் நிலவும் சூழ்நிலை குறித்தும் அவர் அச்சம் தெரிவித்தார்.

“அனைத்துலகச் சட்டம் மற்றும் வரலாற்றுப் பார்வைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத இடமாக மேற்கு கரை உள்ளது. மேற்கு கரையும் மற்றொரு காஸாவாக மாறினால் நிலைமை மேலும் மோசமாகிவிடும்,” என்று அவர் எச்சரித்தார்.

“மனிதாபிமான உதவிகளைத் தடுக்காமல் பொதுமக்களைப் பாதுகாத்து, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, உயிர்காக்கும் உதவிகளை உறுதி செய்து, சண்டை நிறுத்தத்தை புதுப்பிக்க வேண்டிய தருணம் இது.” என்று திரு குட்டரெஸ் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்