https://www.straitstimes.com/world/middle-east/un-security-council-set-to-meet-over-deadly-rafah-strike
ராஃபா: காஸாவின் ராஃபா நகரில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டோருக்கான முகாம் ஒன்று இஸ்ரேலியப் படைகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய நாட்டு (ஐநா) நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றம் செவ்வாய்க்கிழமையன்று (மே 28) அவசரமாக விவாதிக்கத் திட்டமிட்டுள்ளது.
திங்கட்கிழமையன்று (மே 27) நிகழ்ந்த அந்தத் தாக்குதலில் பலர் மாண்டனர். அந்தத் தாக்குதலுக்கு அனைத்துலக அளவில் பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
அத்தாக்குதல் ஒரு படுகொலைச் சம்பவமாக பாலஸ்தீனர்களாலும் அரபு நாடுகளாலும் வகைப்படுத்தப்பட்டது. சம்பவத்தை ஒரு வருத்தத்துக்குரிய விபத்தாக வகைப்படுத்திய இஸ்ரேல், விசாரித்து வருவதாகக் கூறியது.
“காஸாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. பெருந்துயரத்தைத் தரும் இந்நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும்,” என்று ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
ஐநா மனிதாபிமான விவகாரப் பிரிவுத் தலைவரான மார்ட்டின் கிரிஃபித்சும் கண்டனம் தெரிவித்தார்.
“தாக்குதலை விபத்து என்று கூறுவது மாண்டோர், அவர்களுக்கு நெருக்கமானவர்கள், பிறரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் ஆகியோருக்கு எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை,” என்று திரு கிரிஃபித்ஸ் குறிப்பிட்டார்.
தாக்குதல் தொடர்பில் ஐநா பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த அரசதந்திரிகள் செவ்வாய்க்கிழமையன்று கூடி விவாதிக்கத் திட்டமிட்டனர். பாதுகாப்பு மன்றம் கூடி விவாதிக்க வேண்டுமென்று அல்ஜீரியா கேட்டுக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
ராஃபா தாக்குதல் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டுக் கொள்கைப் பிரிவுத் தலைவர், பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். பொதுமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு மன்றத்தின் பேச்சாளர் ஒருவர் எடுத்துரைத்தார்.