தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்தைச் சாடிய ஐ.நா.

1 mins read
aae7f49b-538d-49e5-8731-ee132974ace9
காஸா நகரை இஸ்ரேல் கைப்பற்றினால் தற்போதைய நிலை மேலும் மோசமாகும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் சாடியது. - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: காஸா நகரைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்தை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் சாடியுள்ளார்.

இஸ்ரேலின் அந்த முடிவு நிலைமையை மேலும் ஆபத்தாக்கும் என்றும் பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாலஸ்தீன வட்டாரத்தில் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நோக்கில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை காஸா நகரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதற்கு இஸ்ரேலிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இஸ்ரேல் ஒட்டுமொத்த கரையோரப் பகுதியையும் கைப்பற்றுமா என்ற கேள்விக்கு “அதுதான் எங்கள் நோக்கம்,” என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கூறினார்.

“அந்த முடிவு தற்போதுள்ள நிலைமையையும் பல மில்லியன் பாலஸ்தீனர்கள் ஏற்கெனவே எதிர்கொள்ளும் பின்விளைவுகளையும் மோசமாக்கும். அது, எஞ்சியுள்ள பிணையாளிகள் உட்பட இன்னும் பல உயிர்களுக்கு ஆபத்தாக முடியும்,” என்று திரு குட்டரஸ் குறிப்பிட்டார்.

அனைத்துலக சட்டத்தின்கீழ் வீடுகளை இழக்கும் சூழலுக்கு ஒருவரைத் தள்ளுவது சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.

இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களால் 61,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் காஸாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

அந்தத் தாக்குதல்கள் பாலஸ்தீனர்கள் பட்டினியில் உழலும் நிலை உருவாகியதோடு காஸாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையையும் சிதறடித்தது.

குறிப்புச் சொற்கள்