கணக்கில் காட்டப்படாத ரொக்கம்: ஜோகூர் சோதனைச்சாவடியில் தம்பதியர் கைது

கணக்கில் காட்டப்படாத ரொக்கம்: ஜோகூர் சோதனைச்சாவடியில் தம்பதியர் கைது

படம்: த ஸ்டார்

29 Oct 2026 - 2:37 pm

2 mins read

ஜோகூர் பாரு: கணக்கில் காட்டப்படாத கிட்டத்தட்ட 3 மில்லியன் மலேசிய ரிங்கிட் (S$944,370) ரொக்கப் பணத்துடன் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற கணவன், மனைவி ஆகிய இருவரையும் ஜோகூர் சோதனைச்சாவடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

42,41 வயதுடைய அந்தத் தம்பதியினர், அக்டோபர் 27ஆம் தேதி காலை 11:40 மணியளவில் சுல்தான் இஸ்கந்தர் சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்தல் வளாகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பின் செயல்பாட்டுப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் முகம்மது நசாருடின் எம். நாசிர் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கிச் செல்லும் பாதையில் வெள்ளை நிறக் காரில் சந்தேக நபர்கள் சென்றுகொண்டிருந்தபோது, சோதனையிடுவதற்காக அவர்களது வாகனம் நிறுத்தப்பட்டது.

விசாரணையின்போது ஓட்டுநரின் நடத்தையில் சந்தேகமடைந்த எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், வாகனத்தின் பின்பகுதி, பயணிகள் இருக்கைகளைத் திறந்து காட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மலேசிய நாணயமான 1.97 மில்லியன் ரிங்கிட், S$300,000 ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் முன்பக்கப் பயணிகள் இருக்கைப் பகுதியில், மூன்று பெட்டிகள், ஒரு துணிப் பை மற்றும் ஒரு கறுப்பு பை ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

வர்த்தகர்களான அந்தத் தம்பதியினர் சிங்கப்பூருக்குச் சுற்றுப்பயணிகளாகச் செல்வதாகக் கூறினர். இருப்பினும், இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு சென்றதற்கான உண்மையான நோக்கம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டிற்குள் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ 10,000 அமெரிக்க டாலர் (S$ 12,820) அல்லது அதற்கு இணையான மதிப்பிலான ரொக்கப் பணம் மற்றும் பணப் பத்திரங்களைக் கொண்டுசென்றால், அதனை அதிகாரிகளிடம் முறையாக அறிவிக்க வேண்டும் என்று நினைவூட்டப்பட்டுள்ளது.

கணக்கில் காட்டாத பணத்தை எடுத்துச் செல்வது சட்டவிரோதக் குற்றமாகும் என்றும், 1967ஆம் ஆண்டின் சுங்கச்சட்டத்தின் கீழ் அத்தகைய நபர்கள் மீது புலன்விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்