https://www.channelnewsasia.com/world/canada-wildfire-us-smoke-new-york-6259861
நியூயார்க்: கனடாவில் கட்டுப்படுத்த முடியாமல் எரிந்து வரும் காட்டுத்தீயின் புகை, அண்டை நாடான அமெரிக்காவிலும் பரவி, பேரளவிலான சுகாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்னசோட்டா, விஸ்கான்சின், மிச்சிகன், இல்லினாய்ஸ் உள்ளிட்ட கனடா எல்லையோர அமெரிக்க மாநிலங்கள் இந்தப் புகையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதே நேரத்தில் நியூயார்க் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமடைந்தது.
சில இடங்களில் காற்றத்தரக் குறியீடு 700ஐ தாண்டியுள்ளதாக அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு கூறியது.
நியூயார்க்கின் புகழ்பெற்ற மேன்ஹாட்டன் கட்டடங்கள் வியாழக்கிழமை (ஜூலை 16) கனத்த புகைமூட்டத்தால் முற்றிலுமாக மறைக்கப்பட்டன. புகைமூட்டத்தின் தாக்கம் மோசமடைந்ததை அடுத்து, சிகாகோ நகரின் கடற்கரைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நகர மேயர் ஸோரான் மம்தானி எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்கள், நூலகங்களில் இலவச முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன.
குளிரூட்டி வசதி இல்லாதவர்களுக்காக நூற்றுக்கணக்கான குளிர்விப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் மட்டும் 130க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் 60க்கும் மேற்பட்டவை கட்டுப்பாட்டை மீறி எரிகின்றன.
இதுவரை 1.9 மில்லியன் ஹெக்டர் பரப்பளவிலான காடுகள் சாம்பலாகியுள்ளன.
15க்கும் மேற்பட்ட தொலைதூரக் குடியிருப்புகளில் வசித்த மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த கனடா அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

