துபாய்: காஸாவில் போர் முடிந்த பிறகு அங்கு உருவாகும் அரசாங்கத்திற்கு ஐக்கிய அரபு சிற்றரசுகள், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உதவக்கூடும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியிருந்தார்.
அந்தக் கருத்திற்கு ஐக்கிய அரபு சிற்றரசுகள் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் நெட்டன்யாகுவின் கருத்தை முற்றிலும் தவறானவை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்திற்கு விடுதலை கொடுத்து அதன் மக்களின் நம்பிக்கைக்கும் நல்வாழ்வுக்கும் உறுதியாக புதிய காஸா அரசாங்கம் இருக்கும் என்றால் ஐக்கிய அரபு சிற்றரசுகள் உதவக்கூடும் என்றார் ஷேக் அப்துல்லா.
பாலஸ்தீனத்திற்கு விடுதலை கொடுப்பதற்கு இஸ்ரேலிய அமைச்சரவையில் கடும் எதிர்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் போர் முடிந்தாலும் காஸா எல்லைகளை இஸ்ரேல் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்கும் என்றும் நெட்டன்யாகு கூறியிருந்தார்.
காஸா போர் தொடங்கிய பிறகு இஸ்ரேலுடன் ஒரு சில அரபு நாடுகள் மட்டுமே அரசதந்திர உறவுகளைக் கொண்டுள்ளன, அதில் ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஒன்று. ஆனால், இப்போது அந்த உறவில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஏற்பட்டு வருகிறது.
பாலஸ்தீனத்தின் விடுதலைக்கு ஐக்கிய அரபு சிற்றரசுகள் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.