தைப்பே: சீனா, தைவானைச் சுற்றி போர்க்காலப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தைப்பே ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 27) தெரிவித்தது.
போர் விமானங்கள், வானூர்திகள் ஆகியவற்றை சீனா பயிற்சியில் ஈடுபடுத்தியதாக தைவான் குறிப்பிட்டது. போர் விமானங்கள், வானூர்திகள் உட்பட உட்பட 19 சீன விமானங்கள் தைவானுக்கு அருகே காணப்பட்டதாக தைவான் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
போருக்குத் தயார்படுத்திக்கொள்ளும் விதமாக பெய்ஜிங் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் பயிற்சியில் ஈடுபட்டதாக தைவானியத் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது. பயிற்சியில் சீனாவின் போர்க்கப்பல் ஈடுபட்டதாகவும் அது கூறியது.
அமெரிக்கா, தைவானுக்கு இரண்டு பில்லியன் டாலர் (2.64 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான ஆயுதங்களை விற்றதற்கு எதிராக சீனா முன்னதாகக் கடும் கண்டனம் தெரிவித்தது, அதற்குப் பதிலடி தரப்படும் என்றும் சீனா உறுதிகூறியது.
அமெரிக்கா, தைவான் இரண்டுக்கும் இடையே அதிகாரபூர்வ அரசதந்திர உறவு கிடையாது. இருந்தாலும் இருநாட்டு தற்காப்பு ஒப்பந்தப்படி தைவான் தன்னைத் தற்காத்துக்கொள்ள அமெரிக்கா அதற்குத் தேவையான உதவி வழங்க வேண்டும்.
அதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளால் பெய்ஜிங் சினமடைந்தது.
இரண்டு பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியிருப்பதாக அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 25) அறிவித்தது. அதன்கீழ் உக்ரேன் போரில் பயன்படுத்தப்பட்ட நவீன தற்காப்பு முறையும் தைவானுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்நடவடிக்கையை சீனா வன்மையாகக் கண்டிப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு சனிக்கிழமையன்று (அக்டோபர் 26) கூறியது. தனது சுய ஆளுமை உரிமையைத் தற்காக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அந்நாடு அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
தைவானுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் தைவான் நீரிணையில் அமைதி, நிலைத்தன்மையை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு சீனா, அமெரிக்காவுக்குக் கூறி வந்துள்ளதாகவும் சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

