வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காலத்தில் அரை மில்லியனுக்கும் மேற்பட்ட குடியேறிகளுக்கு சட்ட ரீதியாக தற்காலிக தங்கும் அனுமதி வழங்கப்பட்டது.
அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த அனுமதியை தற்போதைய அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை (மார்ச் 21ஆம் தேதி) அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பு மார்ச் 25ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்பட உள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 35 பக்க அறிவிப்பில், மனிதேய அடிப்படையில் வழங்கப்பட்ட பிணை, அதன் தொடர்பில் கியூபா, நிக்காராகுவா, ஹைட்டி, வெனிசுவேலா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி அட்டை போன்றவை ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேற்கூறிய தகவலை சிபிஎஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்தத் திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட 532,000 பேர் அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு அந்த சட்டப் பாதுகாப்பு இன்னமும் இருக்கிறது என்பதும் தெரியவில்லை என்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை கூறுகிறது.
இவர்களில் சட்டரீதியாக பாதுகாப்பற்ற முறையில் இருப்போர் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் அல்லது அவர்கள் வெளியேற்றப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெனிசுவேலா, ஹைட்டி நாடுகளிலிருந்து தற்காலிகமாக பாதுகாக்கப்பட்ட முறையில் வந்தோருக்கான பாதுகாப்பு ஏற்கெனவே மீட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல நூறாயிரக்கணக்கான குடியேறிகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.