கோலாலம்பூர்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் வியாழக்கிழமை (ஜூலை 31) தொலைபேசி வாயிலாக உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி, மலேசிய இறக்குமதிகளுக்கு 25 விழுக்காட்டு வரி நடப்புக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில் அதற்கு ஒரு நாள் முன்பாக இரு தலைவர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளனர்.
மலேசியப் பொருள்களுக்கான வரியை அதிகபட்சம் 20 விழுக்காடாகவோ அல்லது 15 விழுக்காடாகவோ குறைப்பது தொடர்பான உடன்பாடு குறித்து ஆகஸ்ட் 1ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரபூர்வ தகவல்கள் குறிப்பிடுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
ஹலால் சான்றிதழ், மேம்பட்ட தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கான அரியவகைத் தனிமங்களின் விநியோகம் போன்ற சில அம்சங்கள் தொடர்பில் மலேசியா விட்டுக்கொடுக்க நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
வியாழக்கிழமை காலை இரு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியதாகவும் அமெரிக்கத் தரப்பு அதுகுறித்துச் சில மணி நேரம் முன்புதான் பரிந்துரைத்ததாகவும் மலேசிய அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.
மருந்துப்பொருள்கள் உள்ளிட்ட சில பொருள்களுக்கு அமெரிக்கா வழங்கும் ஹலால் சான்றிதழை அங்கீகரிக்கக் கோலாலம்பூர் இணங்கியுள்ளதாக மலேசிய வர்த்தக, பொருளியல் துறை அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். எனவே, மலேசியாவுக்கு இறக்குமதியாகும் அமெரிக்கப் பொருள்களுக்கு மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையின் அங்கீகாரம் இனி தேவைப்படாது.
மேலும், மலேசியா அமெரிக்காவிற்குச் சில அரியவகைக் கனிமங்களை விநியோகிக்கும். மலேசியாவில் தற்போது ஒரு டிரில்லியன் ரிங்கிட் (S$302 பில்லியன்) மதிப்பிலான 16 மில்லியன் டன்னுக்கும் அதிகமான அரியவகைக் கனிமங்கள் உள்ளன. சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் அந்தக் கனிமத் தாதுக்களைப் பதப்படுத்தும் தொழில்நுட்பம் கைவசம் இல்லாததால் மலேசியா அவற்றைச் சீனாவிற்கு ஏற்றுமதி செய்துவருகிறது.
மலேசியா - அமெரிக்கா இடையிலான வரிவிதிப்புப் பேச்சுகளில் ‘பூமிபுத்ரா’ அம்சம் முக்கியத்துவம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வேளையில், அதிபர் டிரம்ப் எதிர்வரும் அக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள இணங்கியிருப்பதாகத் திரு அன்வார் தெரிவித்துள்ளார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் 13வது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்வதற்குமுன் திரு அன்வார் இந்தத் தகவலை வெளியிட்டார்.
வியாழக்கிழமை காலை தொலைபேசியில் உரையாடியபோது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆசியானின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நாடு என்ற வகையில் மலேசியா அந்த மாநாட்டை ஏற்றுநடத்தவிருக்கிறது.

