பிரிட்டனைச் சேர்ந்த ஜகுவார் லேண்ட் ரோவர் கார் நிறுவனம், அமெரிக்காவில் எந்த வாகனங்களையும் உற்பத்தி செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிகள் கார் தொழிலைப் பாதிப்பதால் ஜகுவார் நிறுவனம் அந்த முடிவை எடுத்துள்ளது.
“ஜகுவார் தலைமை நிர்வாக அதிகாரியின் கருத்துபடி அமெரிக்காவில் கார்களை உற்பத்திசெய்ய எங்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை என்பதை உறுதிசெய்யலாம்,” என்று நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் தொழிற்சாலைகளைக் கொண்டிராத ஜகுவார் நிறுவனம், திரு டிரம்ப்பின் வரி அறிவிப்பை அடுத்து ஏப்ரலில் அமெரிக்காவுக்கான அதன் ஏற்றுமதிகளை நிறுத்தியது. இந்த மாதம் ஜகுவார் நிறுவனம் அமெரிக்காவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.
திரு டிரம்ப்பின் கணிக்க முடியாத வர்த்தகக் கொள்கைகள் உலக நாடுகளின் வர்த்தகங்களைத் தொடர்ந்து பாதித்துவருவதால் லாப முன்னுரைப்பைப் பிடித்துவைத்த நிறுவனங்களின் பட்டியலில் ஜகுவாரும் சேர்ந்துகொண்டது.
ஏப்ரல் தொடக்கத்தில் அனைத்து பிரிட்டன் பொருள்கள்மீதும் 10% வரி விதிக்கப்படும் என்று திரு டிரம்ப் அறிவித்தார். கார்கள், எஃகு, அலுமினியம் ஆகியவற்றுக்கு இன்னும் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டன.
மெர்சேடிஸ்-பென்ஸ், கிரிஸ்லர் நிறுவனத்தின் ஸ்டெலாண்டிஸ் ஆகியவையும் முன்னுரைப்பை வெளியிடவில்லை. ஃபோர்ட் நிறுவனம் அமெரிக்கத் தீர்வைகளால் இவ்வாண்டு $1.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என்று சொன்னது.

