பெங்களூரு: தங்க விலை புதன்கிழமை (பிப்ரவரி 5) இதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்டது.
சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்காவின் வரிவிதிப்புக்குப் பதிலடி தரும் விதமாக, அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனா வரிவிதிப்பை அறிவித்ததைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தகப் போர் குறித்த அச்சம் நிலவி வருகிறது.
சிங்கப்பூர் நேரம் காலை 10.53 மணி நிலவரப்படி, தங்க விலை 0.2 விழுக்காடு கூடி ஒரு அவுன்சுக்கு US$2,848.69 என்ற நிலையை எட்டியது. முன்னதாக, அது US$2,853.97 என முன்னெப்போதும் இல்லாத உச்சம் தொட்டது.
உலகின் இரு பெரிய பொருளியல்களான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் பதற்றத்தைத் தணிக்க முற்பட, சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் பேச தாம் அவசரப்படவில்லை என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) கூறியிருந்தார்.
திரு டிரம்ப்பின் வரிவிதிப்புக்குப் பதிலடியாக, அமெரிக்க இறக்குமதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வரிவிதிப்பை அறிவித்த சீனா, உத்தேசத் தடை விதிப்பது குறித்து கூகல் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.