தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஃகு, அலுமினிய வரிகளை இரட்டிப்பாக்கும் அமெரிக்கா

2 mins read
ae924e6b-3667-4697-ba4e-86da95b9b6d7
பென்சில்வேனியாவில் உள்ள எஃகு ஊழியர்கள் நிறைந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உரையாற்றினார். - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், எஃகு, அலுமினியம் ஆகியவற்றின் மீதுள்ள தற்போதைய வரி இரட்டிப்பாகும் என்று அறிவித்துள்ளார். வரும் புதன்கிழமையிலிருந்து அவற்றின் இறக்குமதிகள் மீதான வரி 25 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காட்டுக்கு உயர்த்தப்படும்.

பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் நகரில் உரையாற்றிய திரு டிரம்ப், வரியை உயர்த்துவதன் மூலம் உள்ளூர் எஃகு தொழிற்துறையும் அதன் தேசிய நடவடிக்கைகளும் வளர்வதோடு சீனாவைச் சார்ந்திருக்கும் போக்கும் குறையும் என்றார்.

அமெரிக்க எஃகு நிறுவனத்துக்கும் ஜப்பானின் நிப்போன் எஃகு நிறுவனத்துக்கும் இடையிலான உடன்பாட்டின் மூலம் வட்டாரத்தின் எஃகு உற்பத்தியில் $14 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும் அந்த உடன்பாட்டைதான் பார்க்கவில்லை என்றும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“ஆட்குறைப்போ வெளியில் உள்ள நிறுவனங்களுக்கு வேலையைக் கொடுப்பதோ இனி இருக்காது. ஒவ்வொரு அமெரிக்க எஃகு ஊழியரும் கூடிய விரைவில் $5,000 டாலர் போனஸ் தொகையைப் பெறுவர்,” என்று எஃகு ஊழியர்கள் நிறைந்த கூட்டத்திடம் திரு டிரம்ப் கூறினார்.

அமெரிக்க-ஜப்பான் வர்த்தக உடன்பாடு குறித்து எஃகு ஊழியர்களின் சில கவலைகளை வெளிப்படுத்தினர். சம்பளம், வேலைக்கு ஆள் சேர்ப்பது போன்றவற்றைப் பார்த்துக்கொள்ளும் ஊழியர்களின் தொழிற்சங்க ஒப்பந்தங்களை ஜப்பான் எவ்வாறு மதித்து நடக்கும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த திரு டிரம்ப், 2018ஆம் ஆண்டு முதல் தவணைக் காலத்துக்கு அதிபரானபோது எஃகு மீது 25 விழுக்காட்டு வரி விதித்ததன் மூலம் அமெரிக்காவின் ஆகப் பெரிய எஃகு உற்பத்தி நிறுவனத்தைக் காப்பாறியதாகச் சொன்னார்.

அமெரிக்க எஃகு நிறுவனம் தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதிசெய்ய வரிகளை 50 விழுக்காடு உயர்த்தியதாக அவர் குறிப்பிட்டார்.

“50 விழுக்காட்டு வரியை அவர்கள் தாண்டிசெயல்பட முடியாது,” என்ற அவர், “இதற்குமுன் இல்லாத வகையில் பென்சில்வேனியா எஃகை அமெரிக்காவின் முதுகெலும்பாக முன்னிறுத்தப்போகிறோம்,” என்றார்.

அமெரிக்காவின் எஃகு உற்பத்தி அண்மை ஆண்டுகளில் சரிந்து வருகிறது. சீனா, இந்தியா, ஜப்பான் ஆகியவை எஃகு உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கின்றன.

அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட கால்வாசி எஃகு அனைத்தும் இறக்குமதி செய்யப்படுபவை. மெக்சிக்கோ, கனடா ஆகியவற்றின் எஃகுமீது சார்ந்திருக்கும் போக்கால் திரு டிரம்ப் சினமடைந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்