பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் அறைகலன் தொழிற்துறைகள், அமெரிக்காவுக்கான ஏற்றுமதியைத் தற்காலிகமாக தாமதப்படுத்த முடிவு செய்துள்ளன.
மலேசியப் பொருள்களுக்கு அமெரிக்கா 24% வரி விதித்துள்ளதே இதற்குக் காரணம்.
மலேசிய அறைகலன் மன்றத்தின் துணைத் தலைவரான மாத்யூ லா, குறிப்பிடத்தக்க வரி விதிப்பால் சந்தையின் சூழ்நிலை நிச்சயமற்றதாக இருப்பதாகவும் சில தயாரிப்பாளர்கள் ஏற்றுமதியை ஒத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“எங்களுடைய அமெரிக்க வாடிக்கையாளர்கள் சரக்குகள் அனுப்புவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில் இத்தொழில்துறையில் உள்ள சிலர் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் தெளிவு ஏற்படும் என்று நம்புகின்றனர்.
“ஆனால், தற்போதைய சூழ்நிலை கணிக்க முடியாததாக இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக எவ்வளவு செலவாகும் என்பது தெரியவில்லை.
“இவற்றில் சில செலவுகளை அறைகலன் தொழில்துறையினர் ஏற்றுக்கொள்ள முன்வரலாம்,” என்றார் அவர்.
மலேசியாவின் அறைகலன் தொழில்துறைக்கு அமெரிக்கா முக்கிய சந்தையாக விளங்குகிறது. அதாவது மலேசியாவின் 60 விழுக்காடு ஏற்றுமதி அமெரிக்காவுக்குச் செல்கிறது. இவ்வாண்டு பிப்ரவரி வரையில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மலேசிய அறைகலன்களின் மதிப்பு 12.82 பில்லியன் ரிங்கிட்டாகும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்டவை மலேசிய அறைகலன்களுக்கு பிற முக்கிய சந்தைகளாக விளங்குகின்றன.
அமெரிக்க வரி விதிப்பின் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக தொழில்துறை பிரதிநிதிகளுடன் வர்ததக, தொழில் அமைச்சு பேச்சு நடத்தி வருவதை திரு லா சுட்டிக்காட்டினார்.
மலேசியாவின் முக்கிய ஏற்றுமதிகளான மர அறைகலன்கள், உணவு மேசை, நாற்காலி, சோஃபா போன்றவை முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் சொன்னார்.
ஆனால், தொழிற்சாலையை மற்ற நாடுகளுக்கு மாற்றுவது சிறந்த தீர்வாக அமையாது என்று எச்சரித்த திரு லா, நமது பாணியையும், வடிவமைப்பையும் புகுத்துவதற்கு சில காலமாகும் என்றார்.

