வாஷிங்டன்: அமெரிக்கா வரும் ஜூன் 14ஆம் தேதி ராணுவ அணிவகுப்பை நடத்த இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவம் தொடங்கப்பட்டு 250 ஆண்டுகளைக் குறிக்கும் விதமாக அது அமையும் என்று வெள்ளிக்கிழமை (மே 2) வெளியிட்ட அறிக்கையில் வெள்ளை மாளிகை கூறியது.
அன்றைய தினம் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் 79வது பிறந்த நாளும்கூட.
மூத்த அமெரிக்கர்கள், தற்போது ராணுவத்தில் சிறப்பாகப் பணிபுரிவோருடன் ராணுவ வரலாற்றையும் கௌரவிக்கும் விதமாக அதிபர் டிரம்ப் ராணுவ அணிவகுப்பை நடத்த விரும்புவதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் அன்னா கெல்லி, தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவப் படையின் ஆண்டுவிழா நிகழ்ச்சியில், அணிவகுப்புடன் வாணவேடிக்கை, நேஷனல் மால் கடைத்தொகுதியில் கொண்டாட்டம் ஆகியவையும் இடம்பெறும் என்று அமெரிக்க ராணுவப் பேச்சாளர் ஹீதர் ஹேகன் தெரிவித்துள்ளார்.
“250 ஆண்டுகள் என்ற சிறப்பு மைல்கல்லைக் கொண்டாடும் விதமாக மிகப் பெரிய அளவில், கூடுதலான திறன் விளக்க நிகழ்ச்சிகள், கூடுதலான ராணுவக் கருவிகளைக் காட்சிப்படுத்துதல், சமூகத்துடனான கூடுதல் தொடர்பு போன்றவற்றை மேற்கொள்வது குறித்து ராணுவம் ஆராய்ந்து வருகிறது,” என்றார் அவர்.
கிட்டத்தட்ட 150 ராணுவ வாகனங்கள், 50 விமானங்களுடன் படைவீரர்கள் 6,600 பேர் அணிவகுப்பில் பங்கேற்பர் என்றார் திருவாட்டி ஹேகன்.
அதிபராகத் தமது முதல் தவணைக் காலத்திலேயே வாஷிங்டனில் ராணுவ அணிவகுப்பை நடத்த விரும்பினார் திரு டிரம்ப். ஆனால், அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு அதற்கு US$92 மில்லியன் (S$119 மில்லியன்) செலவாகும் என்று கூறியதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், பீரங்கிகள் உள்ளிட்ட கனமான ராணுவ வாகனங்கள் அணிவகுப்பதால் நகரின் சாலைகள் சேதமடையும் என்ற கவலையும் முன்வைக்கப்பட்டது.
இப்போதைய ராணுவ அணிவகுப்பு குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வாஷிங்டன் நகர மேயர் அதேபோன்ற கவலையைத் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
சாலைகளில் ராணுவ வாகனங்கள் அணிவகுத்தால் அதைத் தொடர்ந்து சாலைகளை மறுசீரமைக்க மில்லியன்கணக்கான டாலர்களைச் செலவிட நேரிடும் என்று மேயர் மரியல் பௌசர் கூறினார்.
இதற்குமுன்னர், 1991ஆம் ஆண்டு வளைகுடாப் போர் முடிவுற்றதைக் கொண்டாடும் வகையில் வாஷிங்டனில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.