சிங்கப்பூரிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள்மீதான 10 விழுக்காட்டு வரியைக் குறைக்க அமெரிக்கா தயாராக இல்லை. இருப்பினும் இருநாடுகளும் அவற்றின் பொருளியல் தொடர்புகளைப் பயனளிக்கும் வகையில் எப்படி வலுப்படுத்தலாம் என்பதை ஆராயவும் முன்னேற்றத்துக்கான பாதை குறித்து கலந்துரையாடவும் ஒப்புக்கொண்டுள்ளன.
துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங், அமெரிக்காவின் வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லியுட்னிக்குடன் ஏப்ரல் 25ஆம் தேதி ஆக்கபூர்வமான இணையச் சந்திப்பு இடம்பெற்றதாக லிங்ட்இன் தளத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) பதிவிட்டார். திரு கானும் திரு லியுட்னிக்கும் இருநாட்டுக்கும் இடையிலான பொருளியல், வர்த்தக உறவுகள் குறித்து கலந்துரையாடினர்.
“நமது இருதரப்பு வர்த்தகமும் சிங்கப்பூர் முதலீடுகளும் ஏறக்குறைய 350,000 அமெரிக்க வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவளிப்பதை நான் குறிப்பிட்டேன். சிங்கப்பூருடன் அமெரிக்கா தொடர்ச்சியான வர்த்தக உபரியையும் அனுபவித்தது என்றும் கடந்த ஆண்டு அது 39.4 பில்லியன் வெள்ளியாக இருந்தது என்றும் சொன்னேன்,” என்று திரு கான் கூறினார்.
சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இருக்கும் தலைசிறந்த, சமநிலையான வர்த்தக உறவை திரு லியுட்னிக் பாராட்டியதையும் திரு கான் குறிப்பிட்டார்.
“அமெரிக்கா அதன் 10 விழுக்காட்டு அடிப்படை வரியைத் தளர்த்தத் தயாராக இல்லை என்றபோதும் பயனளிக்கும் வகையில் நமது பொருளியல் உறவை எப்படி வலுப்படுத்தலாம் என்பதை ஆராயவும் முன்னேற்றத்துக்கான பாதை குறித்து கலந்துரையாடவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்,” என்று திரு கான் பகிர்ந்துகொண்டார்.
சிங்கப்பூர்ப் பொருளியல் மீள்திறன் பணிக்குழுவின் தலைவருமான திரு கான், சிங்கப்பூருக்குத் திரு லியுட்னிக்கை வரும்படி அழைத்ததோடு அமெரிக்காவுடனான சிங்கப்பூரின் வர்த்தக, முதலீட்டு பங்காளித்துவத்தை வளர்க்க எதிர்பார்ப்பதாகவும் சொன்னார்.
ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பல நாடுகள்மீது புதிய வரிகளை விதித்தார். அவற்றுள் சிங்கப்பூர் இறக்குமதிகள்மீது அவர் விதித்த 10 விழுக்காட்டு வரியும் அடங்கும். அது ஏப்ரல் 5ஆம் தேதி நடப்புக்கு வந்தது.

