தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கா: கடும் வானிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36

2 mins read
96df34cc-17a3-4a72-b99d-928bc7aa50a8
மிசிசிப்பியில் ஆறு மரணங்களுடன் அங்குள்ள வீடுகள் கடும் சேதத்துக்குள்ளாயின. - படம்: இபிஏ

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சில்வேனியா, நியூயார்க், மத்திய அட்லாண்டிக் மற்றும் தென்கிழக்கு மாநிலங்களின் சில பகுதிகள் சேதப்படுத்தும் காற்று மற்றும் சூறாவளி காரணமாக, கடந்த வார இறுதி பேரிடர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறு மாநிலங்களில் 36 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய வானிலை சேவை நிலையம் தெரிவித்துள்ளது.

“36 அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. மேலும் பல வீடுகள் பேரழிவிற்கு ஆளாகியுள்ளன. சூறாவளி மற்றும் புயல்களைக் கண்காணித்து வருகிறோம்,” என்று அதிபர் டிரம்ப் கூறியதாக வெள்ளை மாளிகை அறிக்கை கூறியது.

ஆர்கன்சோ மாநிலத்துக்குத் தேசிய காவல்படை அனுப்பப்பட்டுள்ளதாகவும் மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவுவதாகவும் திரு டிரம்ப் அறிவித்தார்.

தெற்கு, மத்திய மேற்குப் பகுதிகளைத் தாக்கிய புயல்கள் மார்ச் 16ஆம் தேதி கிழக்கு நோக்கி நகர்ந்தன.

‘பவர்அவுட்டேஜ்’ வலைத்தளத்தின் தகவலின்படி, மார்ச் 16 அன்று பிற்பகல் நிலவரப்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் 340,000 க்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர்.

மிசூரியில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. ஐந்து மாவட்டங்களில் 12 இறப்புகள் என்று அந்த மாநிலத்தின் நெடுஞ்சாலை சுற்றுக்காவல் படை சமூக ஊடக தளமான Xல் வெளியிட்டது. அந்த மாநிலத்தில் இன்னும் ஒருவர் காணவில்லை என்றும் இது 27 மாவட்டங்களில் பரவலான அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மிசோரி மாநில ஆளுநர் மைக் கெஹோ கூறினார்.

“கோவிங்டன் மாவட்டத்தில் ஒரு மரணம், ஜெபர்சன் டேவிஸ் மாவட்டத்தில் இரண்டு மரணங்கள், வால்டால் மாவட்டத்தில் மூன்று மரணங்கள் என மொத்தம் ஆறு மரணங்கள் தமது மாநிலத்தில் நிகழ்ந்துள்ளன என்று மிசிசிப்பி ஆளுநர் டேட் ரீவ்ஸ் X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, மாநிலம் முழுவதும் 29 பேர் காயமடைந்துள்ளதாகவும், 21 மாவட்டங்களில் புயலால் கடும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் திரு ரீவ்ஸ் கூறினார்.

ஆர்கன்சோவில், மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் அம்மாநில அவசர மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.

மார்ச் 14 முதல் மார்ச் 16 மதியம் வரை 39 சூறாவளிகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தேசிய வானிலை சேவையின் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்