தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கும்: வெள்ளை மாளிகை உறுதி

2 mins read
0f0cd9df-e96b-4359-96f2-e28fc7dcfe51
அமெரிக்கா விதிக்கவிருக்கும் புதிய வரிகளை முன்னிட்டு உலக நாடுகளில் வர்த்தகப் போர் மோசமாகக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. - படம்: ஏஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி உலக நாடுகள்மீது புதிய வரிகளை விதிக்கவிருக்கிறார் என்பதை வெள்ளை மாளிகை உறுதிசெய்துள்ளது. அது எவ்வளவு அதிகமாக இருக்கும் என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

திரு டிரம்ப்பின் புதிய வரி அனைத்துலக வர்த்தகப் போரை மேலும் மோசமாக்கக்கூடும் என்று வணிகங்களும் முதலீட்டாளர்களும் அஞ்சுகின்றனர்.

இருப்பினும் திரு டிரம்ப் 2ஆம் தேதி ‘விடுதலையின் நாள்’ என்றும் அன்று அறிவிக்கப்படும் புதிய வரிகள் அனைத்துலக வணிகக் கட்டமைப்பை உயர்த்தும் என்றும் பல வாரங்களாகக் கூறிவந்தார்.

திரு டிரம்ப்பின் வரிகள் நடப்புக்கு வரும்போது இதர நாடுகள் பதிலுக்கு அமெரிக்கப் பொருள்கள்மீது உடனடியாக வரிகளை அறிவிக்கும் என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் கெரொலின் லிவிட் சொன்னார்.

அதிபர் டிரம்ப் ஏற்கெனவே எஃகு, அலுமினியம் ஆகிய இறக்குமதிகள் மீது வரி விதித்ததோடு சீனாவிலிருந்து வரும் பொருள்களுக்கான வரியைக் கூட்டியுள்ளார்.

புதிய வரிகள் அமெரிக்காவுக்கு 6 டிரில்லியன் டாலருக்கு அதிகமான வருவாய் ஈட்டித்தரும் என்று திரு டிரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

அது அமெரிக்கர்களுக்குத் தள்ளுபடிகளாக வழங்கப்படக்கூடும் என்று வெள்ளை மாளிகையின் அறிக்கை குறிப்பிட்டது.

திரு டிரம்ப்பின் நடவடிக்கை அமெரிக்காவின் ஆகப் பெரிய வர்த்தக பங்காளிகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கனடா அமெரிக்காமீது பதில் வரி விதிக்கப்போவதாகச் சொன்னது. கனடியப் பிரதமர் மார்க் கார்னியும் மெக்சிக்கோ அதிபர் குளோடியா ‌‌ஷெயின்பம்மும் அமெரிக்காவின் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கையை எதிர்த்துப் போராடப்போவதாக (ஏப்ரல் 1) சூளுரைத்தனர்.

கனடாவில் ஏற்கெனவே நடப்பில் இருக்கும் ‘பாய் கனடியன்’ (Buy Canadian) இயக்கம் தங்களின் பொருள்களைக் கனடாவுக்குள் கொண்டு செல்வதைச் சவாலாக்கியிருப்பதாக அமெரிக்க நிறுவனங்கள் குறிப்பிட்டன.

இதர நாடுகளும் தகுந்த பதிலடி கொடுக்கவிருப்பதாகத் தெரிவித்தன.

அமெரிக்க ஊழியர்களும் உற்பத்தியாளர்களும் தடையற்ற வர்த்தக உடன்பாடுகளால் கடந்த ஆண்டுகளில் அதிகளவில் பாதிக்கப்பட்டதாகத் திரு டிரம்ப் சொன்னார்.

அமெரிக்க வரி விதிப்பால் சிங்கப்பூரில் பாதிக்கப்படும் கிட்டத்தட்ட பாதி நிறுவனங்கள் அதிகரிக்கும் செலவினத்தைப் பயனீட்டாளர்களிடம் வசூலிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளதாக அமெரிக்க வர்த்தக, தொழிற்சபையின் ஆய்வு குறிப்பிட்டது.

இதர நிறுவனங்கள் விநியோகத் தொடரை பல நாடுகளில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்