செலுத்த வேண்டிய தொகை பாக்கி, உலக சுகாதாரம் பாதிக்கும் ஆபத்து இருந்தும் முடிவை மாற்றாத அமெரிக்கா

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகுகிறது

2 mins read
a447eaba-b61b-4862-b3d3-77331b02f14a
உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) வியாழக்கிழமை (ஜனவரி 22) அதிகாரபூர்வமாக வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) வியாழக்கிழமை (ஜனவரி 22) அதிகாரபூர்வமாக வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது அமெரிக்காவின் சுகாதாரத்தையும் உலகளாவிய சுகாதாரத்தையும் பாதிக்கும் என்ற எச்சரிகைகளுக்கிடையே அமெரிக்கா இம்முடிவை எடுத்துள்ளது.

மேலும், இது அமெரிக்கச் சட்டத்தை மீறும் செயல். ஐநா சுகாதார நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய 260 மில்லியன் அமெரிக்க டாலர் (S$333 மில்லியன்) தொகை அமெரிக்கா கொடுக்க வேண்டும்.

2025ஆம் ஆண்டு அதிபர் பதவி ஏற்ற முதல் நாளிலேயே அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கச் சட்டப்படி, ஓராண்டுக் கால அவகாசம் வழங்கி, நிலுவையில் உள்ள அனைத்துக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் தகவல்களைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் பகிர்ந்துகொள்ளவும் தவறியதால் அமெரிக்காவுக்கு டிரில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். மேலும், நாட்டின் அதிபர் எவ்விதமான அமெரிக்க அரசாங்க நிதி, ஆதரவு அல்லது வளங்களை எதிர்காலத்தில் உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்குவதை நிறுத்தும் அதிகாரத்தை அதிபர் பயன்படுத்தியுள்ளார் என்றும் அவர் சொன்னார்.

அமெரிக்க மக்கள் தேவைக்கும் அதிகமாக அந்நிறுவனத்துக்கு செலுத்தியுள்ளதாகவும் இந்தப் பொருளியல் பாதிப்பு, நிறுவனத்துக்குச் செலுத்தப்பட வேண்டிய கட்டணத்துக்கு அப்பாற்பட்டது எனவும் அப்பேச்சாளர் கூறினார்.

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் உள்பட, பல உலகளாவிய சுகாதார நிபுணர்கள் அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டனர்.

2024, 2025ஆம் ஆண்டுகளுக்கான கட்டணத்தை அமெரிக்கா இன்னும் செலுத்தவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.

அமெரிக்கா வெளியேறுவது குறித்தும் அது எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்தும் பிப்ரவரி மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பு நாடுகள் விவாதிக்க உள்ளன என்று அதன் பேச்சாளர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அமெரிக்கா தனது கட்டணத்தைச் செலுத்தாமல் வெளியேற முடியுமா, அல்லது வெளியேறுவது உலகளாவிய ஒத்துழைப்புக்கு என்ன பொருள் போல்ற கேள்விகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை பதிலளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்