கோலாலம்பூர்: இவ்வட்டாரத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு யார் யார் ஆதரவளிப்பார்கள் என்பதை ஆசியான் அடையாளம் காண வேண்டும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ஆசியான் அமைப்புகள் ஒரே நோக்குடன் எதிர்காலத்தை நோக்கியும் அனைவரையும் உள்ளடக்கியும் செயல்பட வேண்டும் என்றார்.
“அனைத்து ஆசியான் குடிமக்களுக்கும் இவ்வட்டாரம் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருப்பதை உறுதிசெய்யும் பொதுவான இலக்குக்கு இது அவசியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரில் ஞாயிறன்று நடைபெற்ற 29வது ஆசியான் அரசியல் பாதுகாப்பு சமூக மாநாட்டில் அவர் பேசினார்.
ஆசியானுக்கு தலைமையேற்றுள்ள மலேசியா, கலந்துரையாடல், உத்திபூர்வ நம்பிக்கை, நாடு கடந்த குற்றங்கள், தற்காப்பு, சட்ட ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் ஆசியான் ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைப்பதற்காக முன்னுரிமைகளை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“பிணைப்புமிக்க, பொறுப்புணர்வுள்ள, எதிர்காலத்திற்கு ஆயத்தமான சமூகமாக நாம் இருப்பதை உறுதிசெய்ய ஆசியான் உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து செயல்பட மலேசியா கடப்பாடு கொண்டுள்ளது,” என்றும் அவர் சொன்னார்.
அமைச்சர் முகம்மது ஹசன் தனது உரையில், மாநாட்டின் செயல்திட்ட முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யவும் இந்தக் கூட்டம் நடைபெறுவதாகவும் சொன்னார்.
“ஆசியான் வட்டாரம் தற்போது முக்கியமான கட்டத்தில் உள்ளது. அரசியல் சார்பு போட்டி மற்றும் பொருளியல் நிச்சயமற்ற சூழலில் சிக்கலான வட்டார, உலகளாவிய சவால்களை எதிர் நோக்கியிருக்கிறோம். வேலை மோசடி, இணையக் குற்றச் செயல்களால் ஆசியான் பாதுகாப்பு மிரட்டல்களையும் சந்தித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனால் ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு இடையே வட்டார ஒத்துழைப்பு, சட்ட நடவடிக்கை, தகவல் பகிர்வு வழிகள் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மிக முக்கியம் என்று அமைச்சர் முகம்மது ஹசன் கூறினார்.
மலேசியா, இம்மாதம் 26, 27 தேதிகளில் 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டையும் அதன் தொடர்பான கூட்டத்தையும் நடத்துகிறது.

