வாஷிங்டன்: ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் காஸாவில் சண்டையை நிறுத்துவதற்கு முன்வைத்த தீர்மானத்தை அமெரிக்கா ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்துள்ளது. அதன் நட்பு நாடான இஸ்ரேலை அரசதந்திர நெருக்குதலிலிருந்து தற்காக்க வாஷிங்டன் அவ்வாறு செய்திருப்பதாக நம்பப்படுகிறது.
காஸா பஞ்சத்தால் பரிதவிப்பதாய் ஐக்கிய நாட்டு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாதுகாப்பு மன்றத்தின் 14 உறுப்பு நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தன.
இஸ்ரேலின் பீரங்கி வாகனங்களும் ஜெட் விமானங்களும் காஸாவைத் தாக்கிவரும் நிலையில் வாக்களிப்பு நடைபெற்றது.
காஸா நகரில் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. வட பகுதியிலிருந்து பாலஸ்தீனர்களைத் தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) உத்தரவிட்டது.
காஸாவில் அனைத்துத் தரப்பினரும் மதிக்கும் வகையில் உடனடியான, நிபந்தனையற்ற, நிரந்தரச் சண்டைநிறுத்தத்திற்குத் தீர்மானம் அழைப்பு விடுத்தது. அத்துடன் பிணையாளிகளை உடனடியாக எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்கவும் அது கோரியது.
அமெரிக்கா ஏற்கெனவே பல முறை அத்தகைய அணுகுமுறையை நிராகரித்துவிட்டது. ஆக அண்மையில் ஜூன் மாதம் இஸ்ரேலுக்கு ஆதரவாக அது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தியது.
ஏறக்குறைய ஈராண்டுகளாக இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் தொடரும் போரை நிறுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா ஆறாம் முறையாகத் தடுத்துள்ளது. அமெரிக்காவின் முடிவு, பாதுகாப்பு மன்றத்தில் ஓர் இருண்ட தருணம் என்று பாகிஸ்தானியத் தூதர் அசிம் அகமது சொன்னார்.
“உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. பிள்ளைகளின் அழுகுரல்கள் நம் இதயங்களைத் துளைத்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
சென்ற செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கோரிக்கைக்கு ஏற்ப அனைத்துலகப் புலனாய்வுக் குழு தனிப்பட்ட அதன் அறிக்கையை வெளியிட்டது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு காஸாவில் பாலஸ்தீனர்களை அழிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக அது குற்றஞ்சாட்டியது.
நியூயார்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உச்சநிலை மாநாட்டில் காஸா விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.

