உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்த ஐநாவின் காப்31 மாநாடு

உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்த ஐநாவின் காப்31 மாநாடு

படம்: ராய்ட்டர்ஸ்

23 Nov 2026 - 1:56 pm

2 mins read

துருக்கியே: பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான உடன்பாட்டை எட்ட உலக நாடுகள் தவறியுள்ளன.

துருக்கியேயில் நடைபெற்ற ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் காப்31 மாநாட்டில் படிம எரிபொருள், நிதி ஆகியவை குறித்து நாடுகளுக்கு இடையே எழுந்த பிளவுபட்ட கருத்துகளால் உடன்பாடு எட்டப்படாமல் போனது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, நவம்பர் 20ஆம் தேதி பேச்சுவார்த்தைகள் நிறைவடையவிருந்தன. ஆனால், பொதுவான நிலைப்பாட்டை அடைய நாடுகள் முயன்றதால் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22ஆம் தேதிவரை கலந்துரையாடல் நீடித்தது.

வரலாற்றிலேயே ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பருவநிலை மாநாடு இத்தனை நாள்கள் நடைபெற்றது இதுவே முதல்முறை.

உலக வெப்பமயமாதலுக்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படும் படிம எரிபொருளை இறுதிக்கட்ட உடன்பாடு குறிப்பிடவில்லை. அதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் உள்பட பசிபிக் தீவு நாடுகளும் பிற நாடுகளும் உடன்பாட்டை ஏற்க மறுத்தன.

மேலும், அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கத்திற்கு ஏற்ப மாறுவதற்கான நிதி உத்தரவாதத்தைப் பணக்கார நாடுகள் தெளிவாகக் குறிப்பிடாததற்குப் பல வசதி குறைந்த நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதற்குமுன், முக்கிய அரசியல் சார்ந்த உடன்பாடு எட்டப்படாமல் 2009ஆம் ஆண்டு கோப்பென்ஹேகனில் நடைபெற்ற காப் பருவநிலை மாநாடு தோல்வியில் முடிந்தது.

பதவியிலிருந்து ஓய்வெடுக்கவிருக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கலந்துகொள்ளும் இறுதி காப் மாநாடு இது. மாநாடு குறித்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் கூறினார்.

பேச்சுவார்த்தைகள் இணைந்து நடத்திய ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஆண்டனி ஆல்பனிஸ், இக்கட்டான புவிசார் அரசியல் சூழலால் உடன்பாடு எட்டப்படவில்லை என்றார்.

இரண்டு வார பேச்சுவார்த்தைக்குப்பின் சோர்வுற்றிருந்த பேராளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் புதிய, வரைவு உடன்பாடு வழங்கப்பட்டது.

ஆனால், அதில் ‘படிம எரிபொருள்கள்’ என்ற வார்த்தை எந்தப் பக்கங்களிலும் காணப்படவில்லை.

நிலக்கரி, எண்ணெய், எரிவாயு பற்றிய ஒரே மறைமுகக் குறிப்பு, 2023ஆம் ஆண்டு நடைபெற்ற காப்28 மாநாட்டில் எட்டப்பட்ட உடன்பாட்டைச் சுட்டிக்காட்டியது.

அந்த உடன்பாட்டில், எரிசக்தி அமைப்புகளில் படிம எரிபொருள்களைக் கைவிட நாடுகள் ஒப்புக்கொண்டன.

குறிப்புச் சொற்கள்