லாஸ் ஏஞ்சலிஸ்: உலகின் முதன்முறையாக சிறுநீர்ப்பை மாற்று அறுவை சிகிச்சையை தெற்குக் கலிஃபோர்னியாவிலுள்ள மருத்துவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.
சிறுநீர்ப்பை குறைபாடு உள்ளோரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய புதிய சிகிச்சை முறைகளை இந்த மருத்துவர்கள் செய்துள்ளனர்.
கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சலிஸ் பல்லைக்கழகம், சவுதர்ன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிறுநீர்ப்பையில் கடுமையான பாதிப்புக்குள்ளான 41 வயது ஆடவருக்கு இம்மாதம் அறுவை சிகிச்சையைச் செய்தனர்.
டாக்டர் இந்தர்பீர் கில், டாக்டர் நிமா நஸ்ஸிரி ஆகிய அந்த இரண்டு மருத்துவர்கள், தாங்கள் செய்துள்ள சிகிச்சை முறையால் பல்லாயிரம் பேர் பயனடைவர் எனத் தெரிவித்துள்ளனர்.
வெற்றிகரமான இந்தச் சிகிச்சைக்கு அடுத்து கூடுதலாக நான்கு நோயாளிகளுக்கு இதனை செய்து பிறகு அதற்கான விரிவான சோதனைகளை மேற்கொள்ளப்போவதாக இந்த மருத்துவர்கள் திட்டமிடுகின்றனர்.
இந்தச் சிகிச்சையை மேற்கொண்ட நோயாளி ஆஸ்கர் லர்ரெய்ன்ஸார், தாம் இப்போதுதான் நம்பிக்கையை உணர்வதாகக் கூறுகிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக சிறுநீரகங்கள் அகற்றப்பட்ட திரு லர்ரெய்ன்ஸாருக்குப் புதிதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


