வாஷிங்டன்: அமெரிக்காவின் 250வது தேசிய தினக் கொண்டாட்டங்கள் சனிக்கிழமை (ஜூலை 4) அரங்கேறின.
அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமெரிக்காவைப் பெரிய அளவில் பாராட்டினார் அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப்.
மோசமான வானிலை காரணமாக அவரின் உரை பல மணிநேரம் தாமதமாக இடம்பெற்றது. பிறகு திரு டிரம்ப் தமது ஆட்சியில் அமெரிக்கா முன்பிருந்தைவிட பெருமையுடன் நிற்பதாகப் புகழாரம் சூட்டினார்.
நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது தமது சகாப்தத்தை எடுத்துரைக்கப் பெரிய அளவில் பேரணி நடத்தவிருப்பதாக அவர் உறுதியளித்திருந்தார். எனினும், பொதுவாக இந்நாளில் இடம்பெறும் அதிபர் உரைக்கு ஏற்றவாறே அவரின் உரை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் உரை
“இரண்டரை நூற்றாண்டுகளாக அமெரிக்கக் குடியரசு, மனித குலத்தின் வரலாற்றின் மாபெரும் சாதனையாக விளங்கிவருகிறது,” என்று வாஷிங்டனின் தேசிய வளாகத்தில் (National Mall) திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோரிடம் கூறினார். மேடையில் பேசியபோது அவர் இரண்டாம் உலகப் போர், கொரிய, வியட்னாம் போர்களில் சண்டையிட்ட அமெரிக்கர்களையும் பாராட்டிப் பேசினார்.
அதேவேளை கொரிய, வியட்னாம் போர்களில் அமெரிக்கர்களை எதிர்த்துச் சண்டையிட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்றும் அவர் வகைப்படுத்தினார். முன்னதாக, வெள்ளிக்கிழமை (ஜூலை 3) மவுன்ட் ரஷ்மோர் நினைவுச்சின்னத்தில் பேசியபோதும் அவர் அவ்வாறே கூறியிருந்தார்.
“நமது வீரர்கள் போர்க்களங்களில் கம்யூனிசத்துக்கு எதிராகச் சண்டையிட்டது அது மீண்டும் அமெரிக்காவிலேயே தலைதூக்குவதற்கு அல்ல. அதை நாங்கள் நடக்கவிடமாட்டோம்,” என்றார் அவர்.
அண்மைய ராணுவ நடவடிக்கைகள்
அண்மையில் ஈரான், வெனிசுவேலா நாடுகளில் தாம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளையும் திரு டிரம்ப் புகழ்ந்து பேசினார். டெஹ்ரானின் ராணுவத்தை வாஷிங்டன் ‘துடைத்தொழித்தது’ என்று அவர் வகைப்படுத்தினார்.
எனினும், பொதுவாக திரு டிரம்ப் ஆற்றும் உரைகளுடன் ஒப்பிடுகையில் இவ்வுரை குறைவான நேரமே இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த உரை கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நீடித்தது.
1776ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அந்நிகழ்வின் 250வது ஆண்டு நிறைவைக் கொண்டாட பல்வேறு அமெரிக்க நகரங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.


