தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவில் பதவி விலகவுள்ள ர‌ஷ்யாவுக்கான அமெரிக்கத் தூதர்

1 mins read
34192719-e124-46b4-9f3c-9db759cc0a41
லின் டிரேசி. - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: ர‌ஷ்யாவுக்கான அமெரிக்கத் தூதர் லின் டிரேசி, விரைவில் அப்பொறுப்பிலிருந்து விலகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ர‌ஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வியாழக்கிழமை (ஜூன் 12) அதனைத் தெரிவித்தது. மாஸ்கோ-வா‌ஷிங்டன் உறவு மிக மோசமாக இருந்த காலத்தில் திருவாட்டி டிரேசி தூதராகப் பொறுப்பு வகித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவாட்டி டிரேசி மாஸ்கோ சென்றடைந்தார். மாஸ்கோவில் பலர் அமெரிக்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட வேளையில் அவர் அங்குச் சென்றார்.

ர‌ஷ்யாவுக்கான அமெரிக்கத் தூதராகத் திருவாட்டி டிரேசி நியமிக்கப்பட்டதை மாஸ்கோ சாடியது. அப்பொறுப்புக்கு அவர் தகுதியானவரா என்று ர‌ஷ்யா கேள்வி எழுப்பியது.

திருவாட்டி டிரேசியின் பதவிக்காலத்தில் உக்ரேன் போர் முக்கிய அங்கம் வகித்தது. அப்போரால் அமெரிக்க-ர‌ஷ்யத் தொடர்புகள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டன.

ர‌ஷ்யாவில் சிறையில் வைக்கப்பட்ட அமெரிக்கக் குடிமக்களை விடுவிக்கச் செய்யும் முயற்சிகளில் திருவாட்டி டிரேசி ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் எவன் கெர்‌ஷ்கொவிச், முன்னாள் அமெரிக்கப் போர் வீரர் பால் வீலன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் அடங்குவர்.

சிறைக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்கீழ் அவ்விருவரும் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்