தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவுடனான வர்த்தகப் போர் தொடர்கிறது: டிரம்ப்

2 mins read
7644050e-a663-4bf6-b9c3-c4b92561e473
சில நாள்களுக்கு முன்னர் சீனா முக்கியமான சில கனிமங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்தது. அது அதிபர் டிரம்ப்பை அதிருப்தி அடையவைத்தது. - படம்: நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தொடர்கிறது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

சீனா மீதான கூடுதல் இறக்குமதி வரியை நீண்ட காலம் நிறுத்திவைக்க அமெரிக்காவின் நிதி அமைச்சர் ஸ்காட் பெசண்ட் நடவடிக்கை எடுத்துவரும் நேரத்தில் திரு டிரம்ப்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சில நாள்களுக்கு முன்னர் சீனா முக்கியமான சில கனிமங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்தது. அது அதிபர் டிரம்ப்பை அதிருப்தி அடையவைத்தது.

புதன்கிழமை (அக்டோபர் 15) இரவு அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக உடன்பாடு எட்டவில்லை என்றால் அடுத்து என்ன நடக்கும் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த திரு டிரம்ப், “இப்போதே நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. தற்போது 100 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி விதிக்கப்படவில்லை என்றால் அமெரிக்கா வலு இல்லாமல் காட்சியளிக்கும்,” என்று அவர் கூறினார்.

நிதி அமைச்சர் ஸ்காட் பெசண்ட் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியதால் பங்குச் சந்தைகளில் முன்னேற்றம் இருந்தது. ஆனால் திரு பெசண்ட் பேசிய சிலமணி நேரங்களில் அதிபர் டிரம்ப் சீனா குறித்துப் பேசினார், அப்போது அமெரிக்கப் பங்குச் சந்தை செயல்படவில்லை. இதனால் வியாழக்கிழமை (அக்டோபர் 16) பங்குச் சந்தையில் தாக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இனிவரும் வாரங்களில் அமெரிக்க-சீன அதிகாரிகள் வரிவிதிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாமீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகள் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

வரிவிதிப்பு நடப்புக்கு வந்தால் உலக அளவில் குறிப்பாக ஆசிய அளவில் பெரும் தாக்கம் இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

திரு டிரம்ப் கூடுதல் வரிவிதிப்பு தொடர்பாக அறிவித்தபிறகு பங்குச் சந்தையும் ஆட்டம் கண்டது. இரு நாடுகளுக்கு வரிக்கு வரியெனப் பதிலடி கொடுத்தால் அது பெரிய பிரச்சினையாக மாறும் என்று கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்