வாஷிங்டன்: அமெரிக்காவில் 18,000 இந்திய நாட்டவர் சட்டவிரோதமாகத் தங்கி இருப்பதாக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து கண்டறிந்து உள்ளன.
அவர்களை சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்புவது தொடர்பாக அவ்விரு நாடுகளும் கலந்து பேசி உள்ளன.
டிரம்ப் பதவி ஏற்பு நிகழ்வுக்குச் சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் மார்க்கோ ரூபியோ இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
‘ஒழுங்குமீறிய குடிநுழைவு’ என்பது தொடர்பான அந்த ஆலோசனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு கூறியது.
சட்டவிரோதக் குடியேறிகள் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றவும் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கி இருக்கும் இந்தியக் குடிமகன்களை அடையாளம் கண்டு இந்தியாவுக்கு அவர்களைத் திருப்பி அனுப்பவும் இந்திய அரசாங்கம் தயாராக உள்ளது என்று புளூம்பெர்க் ஊடகம் செவ்வாய்க்கிழமை கூறியது.
அத்துடன், தற்போதைய நிலவரப்படி சட்டவிரோதமாகத் தங்கி இருக்கும் 18,000 இந்தியர்களை இரு நாடுகளும் இணைந்து அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படக்கூடும் என்றும் அந்தச் செய்தி தெரிவித்தது.
பொருளியல் உறவுகளை மேம்படுத்தவும் ஒழுங்குமீறிய குடிநுழைவு விவகாரத்தைக் கவனிக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா ஆர்வமாக உள்ளது என்பதை தற்காப்பு அமைச்சர் ரூபியோ திரு ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
திங்கட்கிழமை இரண்டாவது முறை அதிபராகப் பதவி ஏற்ற திரு டிரம்ப், சட்டவிரோதக் குடிநுழைவு விவகாரத்தை மிகவும் கடுமையாகக் கருதுகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது அதுகுறித்து அவர் முக்கியமாகப் பேசி வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து, பதவி ஏற்றதும், சட்டவிரோதக் குடியேற்ற விவகாரத்தைத் துடைத்தொழித்து கள்ளத்தனமாகத் தங்கி இருக்கும் அனைவரையும் அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.
இந்தியத் திறனாளர்கள்
இதற்கிடையே, இந்தியாவின் திறன்வாய்ந்த நிபுணர்கள் அமெரிக்கா சென்று பணியாற்றுவது என்பது இந்திய-அமெரிக்க உறவில் ஒரு முக்கிய பகுதி என்று இந்திய அரசாங்கம் தெரிவித்து உள்ளது.
இந்தியத் திறனாளர்களால் இரு நாடுகளும் நன்மை அடையும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. H-1B விசா தொடர்பான சர்ச்சை நீடிக்கும் வேளையில் இந்தியாவின் கருத்து வெளியாகி உள்ளது.