வாஷிங்டன்: இந்தோனீசிய, அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையே US$38.4 பில்லியன் (S$48.7 பில்லியன்) மதிப்பிலான வர்த்தக, முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இரு நாடுகளுக்கு இடையிலான இறுதி வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்த இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு அவருக்குப் புதன்கிழமை (பிப்ரவரி 18) இரவு அமெரிக்க வர்த்தக சபை விருந்து அளித்துச் சிறப்பித்தது. நிகழ்ச்சியில், இரு நாடுகளின் நிறுவனங்களுக்கு இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சுரங்கம், எரிசக்தி, வேளாண் தொழில், துணிமணி, மரக்கலன், தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த இருநாடுகளின் நிறுவனங்கள் அந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
பின்னர், இரவு விருந்து நிகழ்ச்சியில் அதிபர் பிரபோவோ உரையாற்றினார்.
“இந்தோனீசியாவை நவீனப்படுத்தி தொழில்மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் எங்களுடன் இணையத் தயாராக இருக்கும் கூட்டாளிகளைப் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,” என அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பைச் சந்தித்து திரு பிரபோவோ பேச உள்ளார். அந்தச் சந்திப்பின்போது இந்தோனீசியா மீது அமெரிக்கா விதித்திருக்கும் வரிகள் குறித்துப் பேசி, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இறுதி முடிவு எட்டப்பட்டதும் வர்த்தக உடன்பாட்டில் இரு நாடுகளின் அதிபர்களும் கையெழுத்திடுவர். அந்நிகழ்ச்சி அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை (பிப்ரவரி 19) நிகழவிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது கையெழுத்திடப்பட்டு உள்ள ஒப்பந்தங்கள், இறுதி வர்த்தக உடன்பாடுகளின் சில அம்சங்களில் தொடர்புள்ளவை என்று திரு பிரபோவோ குறிப்பிட்டார்.
மேலும், இந்தோனீசியாவின் வருங்காலத் தோழமை குறித்து தாம் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இரு நாடுகளின் நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களின் US$38.4 பில்லியன் மதிப்பு என்பது, முன்னர் அமெரிக்க-ஆசியான் வர்த்தக மன்றம் (USABC) தெரிவித்ததைக் காட்டிலும் அதிகம்.
அமெரிக்காவிடமிருந்து ஒரு மில்லியன் டன் சோயா பீன்ஸ், 1.6 மில்லியன் டன் சோளம், 93,000 டன் பருத்தி ஆகியவற்றை இந்தோனீசிய நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் என்று அந்த மன்றம் தெரிவித்திருந்தது. ஆயினும், எவ்வளவு காலத்திற்குள் இந்த இறக்குமதிகள் செய்யப்பட வேண்டும் என்று அது குறிப்பிடப்படவில்லை.
ஆனால், கோதுமைக் கொள்முதலுக்கு மட்டும் காலம் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் அமெரிக்காவிடமிருந்து ஒரு மில்லியன் டன் கோதுமையை இந்தோனீசியா வாங்கும். 2030க்குள் அதன் அளவு படிப்படியாக அதிகரித்து ஐந்து மில்லியன் டன்னைத் தொடவேண்டும் என்று அந்த வர்த்தக மன்றம் கூறியிருந்தது.

