வாஷிங்டன்: ஈரானின் எஞ்சியிருக்கும் உள்கட்டமைப்புகளை முற்றிலும் தகர்க்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த சில மணி நேரத்துக்குள், அந்நாட்டின் மிகப் பெரிய பாலம் தாக்கப்பட்டுள்ளது
பாலம் தாக்குதலில் உயிரிழப்பு
ஈரான் தலைநகர் தெஹ்ரானையும் மேற்கு நகரமான கராஜையும் இணைக்கும் 136 மீட்டர் உயரமுள்ள அந்தத் தொங்கு பாலம், ஏறக்குறைய யுஎஸ் 400 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டு வந்தது.
அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ஏவுகணைத் தாக்குதலில், பாலம் நடுவே பிளந்து கீழே விழுந்து நொறுங்கியது. அந்தச் சம்பவத்தில் எண்மர் உயிரிழந்தனர். 95 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பான காணொளியை வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தமது சமூக ஊடகத்தில் பகிர்ந்த திரு டிரம்ப், உடன்பாட்டிற்கு வராவிட்டால், இன்னும் பல அழிவுகள் தொடரும் என்றும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மத்திய கிழக்கின் பொறியியல் அதிசயமாகக் கருதப்பட்ட அந்த பாலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடுமையான புகை மண்டலம் உருவாகியுள்ளது.பாலம் இடிந்து விழும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
ஈரான் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குப் பணியவில்லை என்றால், அந்த நாட்டை “கற்காலத்திற்கு” கொண்டு செல்வோம் என்று முன்னதாக டிரம்ப் எச்சரித்திருந்தார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாக ஈரானும் பதிலுக்கு எச்சரித்ததுடன் டெல் அவிவ் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
போர்க்குற்றம் என டிரம்ப் மீது சாடல்
பொதுமக்களுக்குத் தேவையான மின்சாரம், போக்குவரத்து வசதிகளைத் தாக்குவது போர்க்குற்றம் என்று அனைத்துலகச் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 1949 ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, பொதுமக்களின் வாழ்வாதார இலக்குகளைத் தாக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஈரானின் ஆயுத பலம்
அமெரிக்கா தனது இலக்குகளை எட்டிவிட்டதாகக் கூறினாலும், ஈரானின் ஆயுதக் கிடங்குகள் அச்சுறுத்தலாகவே நீடிக்கின்றன. அதனால் அவ்வட்டாரத்தில் பதற்றநிலை அதிகரித்துள்ளது.
ஈரானின் ராணுவ பலம் இன்னும் முழுமையாக அழியவில்லை என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ஏவுகணை ஏவுதளங்களில் 50 விழுக்காடும், ஆயிரக்கணக்கான ஆளில்லா வானூர்திகளும் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம்
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான்மீது போர் தீவிரமடைந்துள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் பரவி உலகப் பொருளியலை நிலைகுலையச் செய்துள்ளதோடு, உலகளவில் பல ஆயிரம் மக்களைப் பாதித்துள்ளது.
தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
பொருளியல் மந்தநிலை ஆபத்தும் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பங்குச்சந்தைகள் படுவீழ்ச்சி கண்டு, உலகப் பொருளியல் நிலைகுலைந்துள்ளது.

