ஆசிய பசிபிக்கிற்கான நம்பகமான எரிசக்தி விநியோகத்தை அமெரிக்கா வழங்க முடியும்: அமெரிக்க அமைச்சர் நம்பிக்கை

ஆசிய பசிபிக்கிற்கான நம்பகமான எரிசக்தி விநியோகத்தை அமெரிக்கா வழங்க முடியும்: அமெரிக்க அமைச்சர் நம்பிக்கை

2 mins read
a1087aaa-49da-4138-947d-3de610131103
அமெரிக்க உள்துறை அமைச்சர் டக் பர்கம். - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கான நம்பகமான எரிசக்தி விநியோகத்தை அமெரிக்கா வழங்க முடியும் எனச் சனிக்கிழமை (மார்ச் 14) அந்நாட்டு உள்துறை அமைச்சர் டக் பர்கம் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்குப் போர் காரணமாக ஆசிய வட்டாரத்திற்கான எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானியத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். அதனை அடுத்து, மத்திய கிழக்கில் போர் வெடித்தது.

கப்பல் போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடங்களில் ஒன்றான ‌ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. ஆசிய நாடுகளுக்குத் தேவையான எரிசக்தியில் பெரும்பகுதி இந்த வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இதனால் உலகளவில் எண்ணெய், எரிவாயு போன்றவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் எரிசக்தி ஆதிக்கக் கொள்கை குறித்து தோக்கியோவில் நடந்துவரும் 17 நாடுகள் கலந்துகொண்ட அமைச்சர்நிலை மாநாட்டில் திரு பர்கம் பேசினார்.

அப்போது, “எங்கள் நாட்டின் செழிப்பை உறுதி செய்யவும் பங்காளி நாடுகளுக்குத் தேவையான எரிசக்தியை விற்பனை செய்யவும் தேவையான வசதிகள் எங்களிடம் உள்ளன,” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கிவரும் எந்த ஓர் அரசாங்கத்தாலும் தடுத்து நிறுத்த முடியாத வகையில், நம்பகமான, மலிவான எரிசக்தி விநியோகத்தை அமெரிக்கா வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்.

சீனாவிடமிருந்து தாதுக்களைப் பெறுவதைக் குறைக்கும் நோக்கில், லித்தியம், கோபால்ட் (Cobalt) போன்ற முக்கியத் தாதுக்களின் பாதுகாப்பான விநியோகம் குறித்தும் அவர் பேசினார்.

ஜப்பான், தென் கொரியா,தாய்லாந்து உள்ளிட்ட 17 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில், எரிசக்தி, தாதுக்கள் ஆகியவைத் தொடர்பாக அமெரிக்காவுடன் குறைந்தது 38.4 பில்லியன் வெள்ளி (கிட்டத்தட்ட 30 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதாக புளூம்பெர்க் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்